உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு; அவ் வரலாறும் உண்மையானதாய் இருத்தல் வேண்டும்.

மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளதென்னும் உண்மையை அவர் உணர்வராயின் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம்.

துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனும் காத்தல் வேண்டும். வந்தபின் காத்தல் வெள்ளம் வந்த பின் அணைகட்டுவதும், குதிரை களவு போனபின் கொட்டகையைப் பூட்டுவதும், நோயாளி இறந்தபின் மருத்துவம் செய்வதும் ஆகும்.

படிப்பு வேறு, ஆராய்ச்சி வேறு; படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை கடற்கரையில் முத்துச் சிப்பிகளைக் காண்பதற்கும், கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக்கொண்டு வருதற்கும் உள்ள வேற்றுமையாகும்.

பிற்காலக் கல்வெட்டுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை அறிவது ஆழியை நாழிகொண்டு அளப்பது போன்றதே.

சொல்லும் பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான்.

முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவது போல் முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும். கடன்கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை. ஆனால், செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிற மொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி.