உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக மொழிகளின் தொடர்பு

15

இதனால், மூவிடப்பெயர்களைப்பற்றிக் கால்டுவெல் ஐயர் பின்வரு மாறு கூறுகின்றார்:

"மொழிகட்கும் மொழிக்குடும்பங்கட்குமுள்ள உறவைப் பதிற் பெயர்கள் மிக விளக்கிக் காட்டுகின்றன. ஏனெனில், மூவிடப் பதிற் பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப் பெயர்கள், பிறசொல் வகைகளைவிட நிலைத்தவையா யிருந்து நெட்டூழி கழியினும் பெரும்பாலும் திரிவதேயில்லை. அவை, எண்ணுப் பெயர்களினும், வேற்றுமை யுருபுகளினும், வினையீறுகளினும் நிலைப்புத் தன்மை யுடையன. அவை ஏனையவற்றைப் போன்றே திரிதற்கிட மிருப்பினும், அவற்றின் தொடர்புகளையும் கிளைப்புகளையும், ஏறத்தாழ உலகமொழிக ளெல்லாவற்றிலும், அவை காலத்தாலும் இடத்தாலும் எத்துணைச் சேய்மைப்பட்டிருப்பினும் காணலாம். முதலாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்திருந்து, பின்னர், காலக்கடப்பாலும் திரிபுமிகையாலும் வேறினப்பட்ட சில மொழிகளின் தொடர்பை அல்லது உறவைக் காட்டுவதாயிருப்பது, மூவிடப் பெயராகிய சொல்வகையொன்றே. இக் குறிப்பு, சிறப்பாக எல்லாச் சொல்வகைகளுள்ளும் மிகுந்த நிலைப்புத்தன்மை யுள்ளனவாகத் தோன்று கின்ற தன்மைப்பெயர்கட் கேற்கும்." (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம், 2ஆம் பதிப்பு, ப. 254).

மூவிடப் பெயர்களைப்போன்றே, அம்மை அப்பன் என்ற முறைப் பெயர்களும், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும், ஏதேனும் ஒரு வடிவில் காணப்படுகின்றன. குழந்தை முதன்முதற் கற்றுக்கொள்வனவும் தமிழுக்கே சிறப்பாக வுரியவுமான இவ் விரு முறைப்பெயர்களும், எல்லா மொழிகளி லும் வழங்கி வருவது, அவற்றின் உறவைக்காட்டும் சான்றேயாம்.

இதுகாறுங் கூறியவற்றால், மக்களினங்கட்குள்ள தொடர்பு போன்றே மொழிக்குடும்பங்கட்குள்ள தொடர்பும் அண்மையும் சேய்மையுமாகப் பலபடி நிலைப்பட்டதென்றும், சொற்கள் ஒத்திராவிடத்துச் சொல்லாக்க நெறிமுறைகளும், சொல்லாக்க நெறிமுறைகள் ஒத்திராவிடத்து மொழி வளர்ச்சிநிலைகளும், மொழிவளர்ச்சி நிலைகள் ஒத்திராவிடத்து மூவிடப் பெயர் இருகுரவர் பெயர்களும் ஒத்திருக்குமென்றும்; ஒத்த சொற்களின் பெரும்பான்மை சிறுபான்மை ஒரு சின்மைகள் பன்மொழி யுறவின் பல்வேறு அளவைக் காட்டுமென்றும்; எல்லா மொழிகட்கும் பொதுவாக ஒருசில சொற்களும் நெறிமுறைகளுமேனும் இருக்கவே இருக்கும் என்றும்: மாந்தன் தோன்றிய குமரிநாட்டினின்று அந்நாட்டு மொழிவளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் மக்கள் பல்வேறிடங்கட்குப் பிரிந்துபோய்ப் பல்வேறு வகைகளில் தங்கள் மொழிகளை வளர்த்துக்கொண்டமையே, உலகமொழிகளின் வேறுபாட்டிற்கும் தமிழுக்கும் பிறவற்றிற்கு முள்ள தொடர்பிற்குங் காரணமென்றும் அறிந்துகொள்க.

"செந்தமிழ்ச் செல்வி" திசம்பர் 1948

"