உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றாய் மொழியின் இயல்புகள்

19

ஒவ்வொரு சொல்லுக்கும் முதற்பொருள் வழிப்பொருள் என இருவகைப் பொருளுண்டு. காரணச் சொற்களிலெல்லாம் முதற்பொருள் வேர்ப்பொருளையே பற்றியிருக்கும். தமிழிற் காரணச் சொல்லன்றி இடுகுறிச் சொல்லில்லை. வழிப்பொருள் காரணம்பற்றியு மிருக்கலாம்; ஆட்சி பற்றியு மிருக்கலாம். ஆட்சிப்பொருள் வேர்ப்பொருளைத் தழுவவேண்டுவதில்லை. நீர்நிலையில் மக்கள் கூடும் இடத்திற்குத் துறை என்று பெயர். துறுதல் = நெருங்குதல், கூடுதல். துறுவது துறை (துறு + ஐ). இச் சொல் நிலத்திலும் மக்கள் கூடும் இடத்தையும், அகப்பொருள் நாடகத்தில் தலைவன் தலைவி முதலியோர் ஒருவரோடொருவர் அல்லது ஒருவரோடு பிறர் கூடும் இடத்தையும், அங்ஙனம் கூடி ஒருவர் கூறும் கூற்றையும், அக் கூற்றைப் பாடும் ஒருவகைச் செய்யுளையும், ஒவ்வோர் டமும் அல்லது கூற்றும் அல்லது செய்யுளும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பிரிவை யுணர்த்துதலால் ஒன்றன் பிரிவையும் (Department, Branch) முறையே குறிக்கும். இவற்றுள் பிரிவு என்பது வழிப்பொருளே யன்றி முதற் பொருளன்று. துறை என்னும் சொல்லின் வேர் கூட்டத்தைக் குறிக்குமேயன்றி அதன் மறுதலையான பிரிவைக் குறிக்காது. இங்ஙனமே கலை என்னும் சொல்லின் வழிப்பொருளும் பகுதி என்பதாகும். ஒவ்வொரு கலையும் கல்வியின் ஒரு துறையாய் அல்லது பகுதியாயிருப்பதால், கலை என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் பொருள் தோன்றிற்று. கல்வித்துறை பகுதி என்னும் இரு பொருள்களுள், முந்தினது முன்னதேயன்றிப் பின் எனதன்று. கல் என்னும் வினைப் பகுதிக்குக் கலைப்பொருள் உரியதே யன்றிப் பகுதி அல்லது பிரிவுப்பொருள் உரியதன்று. ஆதலால், வடமொழி யிற் கூறப்படும் பகுதிப்பொருளும் தமிழ்ப்பொருளை அடிப்படையாய்க் கொண்டதே.

கலை என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் பொருள் ஒருவகையிற் பொருந்திற்றேனும், மீனம் (மீன் + அம்) என்னுஞ் சொல்லுக்குச் ‘சஞ்சரிப்பது' என்னும் பொருள் ஒருசிறிதும் பொருந்தாது. மின்னுவது மீன் என்பது மிகத் தெளிவாகவும் இயல்பாகவுமிருக்க, அதை விலக்கிவிட்டுச் ‘சஞ்சரிப்பது' என்று பொருள் கூறுவது, மீனம் என்னும் தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டியே. இங்ஙனம் பொருந்தப் புளுகலும் பொருந்தாப் புளுகலும் எல்லாம், தமிழரின் பேதைமை காரணமாக எழுபவையே. ஆதலால், பகுத்தறிவு படைத்த தமிழர் யாவரும் இனிமேலாயினும் பேதைமை விட்டு மேதைமை மேற்கொள்க.

- "செந்தமிழ்ச் செல்வி" சனவரி 1949