உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் வின்மையே தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதுந் தடையாயுள்ளது. ஆயினும் தமிழர் தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி இனிமேலாயினும் உண்மை யறியவும் தாய்மொழியைப் பேணவும் தலைப்படுவாராக.

எத்துணை வடசொற்கள் தமிழிற் கலந்திருப்பினும், அவை எட்டுணையும் தமிழுக்கு வேண்டியவல்ல. "வேண்டுமாயின், தமிழ் தன்னிடத்துள்ள வடசொற்களை முற்றும் விலக்குவது மட்டுமன்று; வடமொழித் துணையின்றியே தழைத்தோங்குதலும் கூடும் என்று

கால்டுவெல் கண்காணியார் கூறியது முற்றும் உண்மையே.

தமிழ்ச்சொற்கள் வடமொழிச் சென்று வழங்கின், அவற்றைத் தமிழ்ச் சொற்களென்று கொள்வதல்லது வடசொற்க ளென்று மயங்குவது, பகுத்தறிவிற்குப் பொருந்தாது.

கலை என்னும் தமிழ்ச்சொல், வடமொழிச் சென்று வழங்குவதினால் மட்டும் வடசொல்லாகிவிடாது. கலை என்பது, கல் என்னும் பகுதியடி யாய்ப் பிறந்த தொழிற்பெயர்; நில்-நிலை, வில்-விலை, கொல்-கொலை என்பனபோல.

இனி, கற்றேன் கற்கிறேன் கற்பேன்; கற்றேம் கற்கின்றேம் கற்பேம்; கற்றாய் கற்கின்றாய் கற்பாய்; கற்றீர் கற்கின்றீர் கற்பீர்; கற்றான் கற்கின்றான் கற்பான்; கற்றாள் கற்கின்றாள் கற்பாள்; கற்றார் கற்கின்றார் கற்பார்; கற்றது கற்கின்றது கற்கும்; கற்றன கற்கின்றன கற்கும் என இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் புடைபெயர்ந்தது கல் என்னும் வினை.

வடமொழியிலோ பகுதியுமின்றிப் புடைபெயர்ச்சியுமின்றிக் கலா என்னும் சொல் தனித்தே நிற்கும். மேலும், கலா என்னும் சொல்லுக்கு வடமொழியிற் கூறப்படும் பகுதிப்பொருள், பிரிவு அல்லது பகுதி என்பதே. மதியின் பிரிவைக் குறிக்கும் கலை என்னும் சொல்லுக்கு இப் பொருள் பொருந்துமேயன்றிக் கல்வியின் பிரிவைக் குறிக்கும் கலை என்னும் சொல்லுக்குப் பொருந்தாது; பொருந்துவதாகத் தோன்றினும் உண்மை யாகாது. பொருத்தம் வேறு; உண்மை வேறு.

கல்லென்னும் பகுதியினின்று, கற்றல், கற்கை, கல்வி, கலை, கற்பு முதலிய பல மொழிப்பெயர்கள் தோன்றும். இவையெல்லாம் பகுதிப் பொருளில் ஒன்றாயிருப்பினும், விகுதிப்பொருளில் வேறென்பதை அறிதல் வேண்டும். 'பொருள் திரியும்போது சொல்லும் உடன் திரியவேண்டும்' என்னும் சொல்லாக்க நெறிமுறைபற்றி, வெவ்வேறு விகுதிகள் பகுதியோடு சேர்ந்து வெவ்வேறு நுண்பொருளை யுணர்த்தும். விகுதி புணர்வதெல்லாம் பொருளை வேறுபடுத்தற்கே. 'பகுதிப்பொருள் விகுதி' கூட ஓரளவு பொருளை வேறுபடுத்தத்தான் செய்யும். அவ் வேறுபாடு மிக நுண்ணிதா யிருப்பதால், அதைக் கவனிப்பதில்லை. 'ஒப்பில் போலி' எனப்படுவதிலும் எங்ஙனம் சிறிது ஒப்புண்டோ, அங்ஙனமே பகுதிப்பொருள் விகுதி என்பதிலும் சிறிது பொருள் வேறுபாட்டில் இடமுண்டு.