உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

காட்சிப்பொருட் கருத்து, கருத்துப்பொருட் கருத்து என்னும் இருவகைக் கருத்துள், முன்னதினின்று பின்னது தோன்றுவதே இயல்பாயி னும், இன்னதினின்றே இன்னது தோன்றவேண்டு மென்னும் யாப்புற வில்லை. இவ் விரண்டுள் எதனின்றும் எதுவும் தோன்றலாம். அல்லாக்கால் சொல்லாக்கம் பெரிதும் முட்டுப்படும்.

இக் கட்டுரையின் முதற் பகுதியில் வரையப்பெற்ற கல் என்னும் சொற்குலத்தோடு, அதன் முற்படையாக இங்குக் காட்டப்பெற்ற பகுதியைச் சேர்த்துக்கொள்ளின், ஒருசொற் பெருங்குல மாகும். எல்லாத் தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் ஐந்நெடில்களினின்றே பிறந்திருப்பதால் அவ் வைந்தும் சொற்பா லடிகளாகும். இனமும் வரணமும் முன்னர்க் குறிக்கப்பட்டன. இவற்றின் விளக்கத்தை இனிவரும் நூல்களிற் கண்டுகொள்க.

இதுகாறும் கூறியவற்றால், மக்கள் போன்றே சொற்களும், குடும்பு முதல் வரணம் ஈறாகப் பல்வகைத் தொகுதிகளாக விரிந்து இயங்குகின்றன வென்றும், மக்கட்குள்ள தொடர்பு போன்றே அவர் சொற்கட்கும் மொழி கட்கும் தொடர்புண்டென்றும் நடுநிலையாகவும் நெறிப்படவும் நுட்பமாக வும் ஆய்ந்து நோக்குவார்க்குச் சொற்றொடர்பும் மொழித்தொடர்பும் புலனாவது திண்ணமென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

அடிச்சொல் காண்வழி

பல மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டிருப் பின், பார்த்தமட்டில் அவற்றின் அடிகளைக் காண்பது அரிதாகும். அவற்றின் நுனிக்கொழுந்திலிருந்து இணுக்கும், வளாரும், குச்சும், போத்தும், சினையும், கொம்பும், கிளையும் கவையுமாக ஒவ்வொன்றாய்க் கீழ்நோக்கிப் பிரித்துக்கொண்டேவரின், இறுதியில், நிலத்தின்மேல் முதற் கீழ்ப்பகுதியாகவுள்ள அடியைக் காணலாம். அதன்பின் அவற்றின் வேரைக் காண்பது தேற்றமாயினும், நிலத்தைத் தோண்டினாலன்றிக் காண முடியாது. இப் பன்மரப் பிணையல் போன்றே, பல அடிகளினின்று கவைத்துக் கிளைத்துப் பல்கிப் பெருகியுள்ள சொற்றொகுதிகளும், பார்த்தமட்டில் பிரித்துணரப்படாவாறு, தம்முள் மயங்கிக் கிடக்கின்றன. அவற்றின் அடியைக் காண்பதற்கும் மேலிருந்து கீழ்நோக்கி வரல் வேண்டும். அடியைக் கண்டபின், ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி வேரைக் காண முடியாது. இதைக் குறித்தற்கே,

"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" என்று கூறிய தொல்காப்பியர்,

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா”

(தொல். பெயர். 1)

(தொல். உரி. 96)

என்று வரையிட்டார். இதனை யுணரமாட்டாத பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரியர், சொன்மூலத்தைக் காணவே முடியாதென்று தொல்காப்பியர் கூறியதாகத் தம் அறியாமையை அவர்மீது ஏற்றிக் கூறினர்.