உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

சொல்வேர் காண்வழிகள்

சொற்பிறப்பியல்(Etymology) ஒரு தனி மொழிநூற்றுறை என்பதைப் பலர் உணர்வதில்லை. புலவர் தேர்வு தேறியமட்டில், அல்லது கல்லூரியாசிரியப் பதவி பெற்றமட்டில், எல்லாச் சொற்கும் வேர்காணும் ஆற்றல் தமக்கு வந்துவிட்டதாகப் பலர் கருதிவிடுகின்றனர்.

இனி, தமிழ்ப் பேராசிரியராக, அவருள்ளும் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக, இருப்பவரோவெனின், மேலையறிஞர் எழுதியுள்ள மொழிநூலைக் கற்றவுடன், தம்மையும் மொழிநூல் ஆசிரியராக அல்லது அதிகாரிகளாகக் கருதிக்கொள்கின்றனர். கல்வி வேறு, ஆராய்ச்சி வேறு என்பதை அவர் அறிகின்றிலர்.

சொற்பிறப்பியல் என்பது சொற்களின் உண்மையான வரலாற்றைக் கூறுவதே யன்றி ஒலிமுறை தழுவியும் உன்னிப்பாகவும் குறிக்கோள் கொண்டும் கூறுவதன்று. இதை 'Etymology' என்னும் பெயரே உணர்த்தும். Gk. etumos = true; etumon = original form of a word; etumologia-E. etymology = account of facts relating to formation and meaning of word.

சொற்பிறப்பியல் என்பது ஒரு தனி அறிவியற் றுறையாதலின், அதற்குரிய நெறிமுறைகளையெல்லாம் அறிந்த பின்னரே சொற்கட்கு வேர்காணும் ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும். அல்லாக்கால், பின்வருமாறு எழுவகை வழுமுடிபாகவே முடியும்.

1. ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology)

எ-கா: பாராளுமன்று Parliament(F. Parleiament.) பார், ஆளும், மன்று என முப்பெயர்ச் சொல் கொண்டது தமிழ்ச் சொற்றொடர். Parler (to speak) என்னும் பிரெஞ்சு வினைமுதனிலையும் ment என்னும் ஈறும் கொண்டது ஆங்கிலச்சொல். ஆதலால் இரண்டும் வெவ்வேறாம்.

2. உன்னிப்புச் சொல்லியல்(Guessing Etymology)

எ-கா: வடு-வடை(நடுவில் துளையாகிய குற்றமுள்ளது.). இது சரியன்று. உழுத்தமா பிசுபிசுப்புத் தன்மையுடைமையால், எளிதில் எண்ணெய் ஊடுருவி வேகுமாறு உழுந்து வடையின் நடுவில் துளையிடப் பெறும். இது வடுவன்று.