உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழெழுத்துத் தோற்றம்

91

கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வடநாட்டினின்று வந்து வைகை மதுரை யில் தங்கிய சில சமணரும், பவுத்தரும், தங்கள் வடநாட்டெழுத்தொடு தமிழுக்கேற்பச் சில புதுக் குறிகளையும் புனைந்து பொறித்த கல்வெட்டு களைக் கொண்டு, முழுப் பூசணிக்காயைச் சோற்றுள் முழுக்குவதுபோல். தமிழ் நெடுங்கணக்கே அசோகப் பிராமியெழுத்தினின்று தோன்றியதாகக் கூறிவருகின்றனர், பிறவித் தமிழ்ப் பகைவரான ஆரிய வழியினர் சிலர். இதைத் தலைசிறந்த ஆராய்ச்சியெனப் போற்றி வருகின்றனர், சில தன்னலத் தமிழ்ப் பேதையரும்.

தமிழ்மொழி கி.மு. 50,000 ஆண்டுகட்கு முன்பும், தமிழெழுத்து கி.மு.20,000 ஆண்டுகட்கு முன்னும், தமிழிலக்கியம் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பும் தோன்றியனவாகும். தமிழெழுத்தினின்றே முன்பு கிரந்தவெழுத்தும் பின்பு தேவநாகரி எழுத்தும் தோன்றியுள்ளன.

தமிழ், குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழியென்றும் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான முதற்றாய் மொழி யென்றும், அறியப்படாததனாலேயே, பெயரன் பாட்டனைப் பெற்றான் என்பது போன்ற தவறான முடிவுகள் ஆராய்ச்சியின் பெயராற் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ் வடமொழிக் கிளையும் பன்மொழிக் கலவையுமான புன் சிறுமொழியெனக் காட்டப்பட்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, இதற்கு அடிப்படைக் கரணியமாதலின், அதை முதற்கண் திருத்துவது தமிழறிஞரின் தலையாய கடமையாம்.

முதன்மொழி உ.த.க. 2ஆவது மாநாட்டு மலர் 1971