உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'ஐ ஔ' 'அய் அவ்' தானா?

123

இனி, ஐகார ஔகாரங்கள் வடமொழியினின்று தமிழுக்கு வந்தன வென்று கூறும் தமிழ்ப் புலவரும் உளர். இது பழைய பாண்டியன் தமிழ்க் கழகம் போன்ற ஓர் அறிவரவையின் தேவையையே வலிதாய் உணர்த்து கின்றது.

ஆரிய

வேத ஆரியரின் முன்னோர் எழுத்தறியாத முல்லை நாகரிக மக்களாய் இந்தியாவிற்குட் புகுந்தனர். முதன்முதலாகத் தோன்றிய இலக்கியமான இருக்கு வேத மந்திரங்கள், எழுதாக் கிளவியாகவே செவிமரபாக நீண்டகாலம் வழங்கிவந்தன. இதனைச் சுருதி (கேள்வி) என்னும் வேதப் பெயரே தெரிவிக்கும். ஆரியப் பூசாரியர் தமிழரொடு தொடர்புகொண்டு வேதமொழி விரிவடைந்த பின், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி யமைக்கப்பட்ட ஆரிய வண்ணமாலையொடு சமற்கிருதந் தோன்றிற்று.

வடமொழி வண்ணமாலையின் பின்மை முந்திய கட்டுரையிற் கூறப்பட்டது. குறிலுக்குக் கரச் சாரியையும், நெடிலுக்குக் காரச் சாரியையும், ஐகார ஔகாரங்கட்குக் கான்சாரியையும், மெய்யெழுத்திற்கு அகரச் சாரியையும் (அ) ஆய்தவெழுத்திற்கு அ – கேனச் சாரியையும், தமிழிலேயே தோன்றின.

வடமொழியிற் கான்சாரியையும் அ- கேனச் சாரியையும் இல்லை; காரச் சாரியையைக் குறிலுக்குங் கொடுப்பர். தமிழில் “தாமினிது பிறக்கும் தகார நகாரம்.” (தொல். பிறப். 11) என்று செய்யுளில் இசைநிறைக்கவன்றி, வேறுவகையில் வராது.

ட, ட்ட, ண என்னும் வருடொலிகளும் (Linguals or Cerebrals) ளகரமும் வடமொழி தமிழினின்று கடன் கொண்டவை. இவை ஆரிய மொழிக் குடும்பத்திற் குரியனவல்ல.

பிராதிசாக்கியங்கள் என்னுங் கிளை வேத இலக்கணங்களும், ஐந்திரம் என்னும் வடமொழி முதற்பேரிலக்கணமும், தமிழிலக்கணத்தைப் பின்பற்றி யெழுந்தவையே. ஐந்திரம் தமிழகத்திலேயே தோன்றித் தமிழகத்திலேயே அழிந்ததாகத் தெரிகின்றது.

'புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணுவர் கோமான் விழுநூ லெய்துவிர்”

என்னும் சிலப்பதிகார அடிகள் கவனிக்கத்தக்கன.

(11: 98 - 9)

ஐந்திரத்திற்கு முந்தியது அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணம். அகத்தியரே தென்னாடு வந்து தமிழ்கற்ற முதல் ஆரியர். அவர் வந்த காலத்தில் மகேந்திரம் என்னும் மாவேந்தமலை கடலில் முழுகிக் கிடந்தது. அது குமரியாறு தோன்றிய மலையா யிருந்திருக்கலாம். அகத்தியர்க்கு முந்திய காலமெல்லாம் தனித் தமிழர் காலமென்றும், அவரொடு தொடங்கியது ஆரியத் தொடர்பு கால மென்றும் அறிதல் வேண்டும்.