உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

10. திசைச்சொல்

இலக்கணக் கட்டுரைகள்

திசைச்சொல்லானது பன்னிரு கொடுந்தமிழ் நாட்டினின்றும் வந்து செந்தமிழில் வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களேயன்றிப் பிறமொழிச் சொற்களாகா.

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அதை யுணராது,

"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

(தொல். சொல். 883)

(15601. 273)

என்று பதினெண்மொழி நிலங்களையும் கூட்டி யுரைத்தார் பவணந்தியார். சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரிய ரெல்லாம் கொடுந்தமிழ்ச் சொற்களையே திசைச்சொற்கு உதாரணங் காட்டினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளெல்லாம் பண்டைக் கொடுந்தமிழ்களாதலின் திசைச்சொற் குதாரணங் காட்டப்பட்டன. வடமொழியொன்றே தொல்காப்பியர் காலத்து இந்து தேசத்தில் வழங்கின பிறமொழியாகும். அது திசைச்சொல்லினின்றும் பிரிக்கப்பட்டு வடசொல் லென விதந்து கூறப்பட்டது. இதனால் கொடுந்தமிழ்ச் சொற்களே திசைச் சொற்களென்றும் பிற மொழிகளெல்லாம் வடசொற்போல அவ்வம் மொழிப் பெயராலேயே குறிக்கப்படுமென்றும், அவை திசைச்சொல்லு ளடங்கா வென்றும் பெறப்படுமாறு காண்க. இங்கிலீசு, இந்துத்தானி, போர்த்துக்கீஸ் முதலிய பிறமொழிச் சொற்களை யெல்லாம் திசைச்சொல்லாக இற்றைச் சிற்றிலக்கணங்கள் கூறாநிற்கும். அவற்றை ஆங்கிலச் சொல், இந்துத்தானிச் சொல், போர்த்துக்கீசியச் சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே குறித்தல் வேண்டும். இவை அக்காலத் தின்மையின் தொல்காப்பியத்திற் கூறப்பட்டில. பிறமொழிச் சொற்களையெல்லாம் தாராளமாய்த் தமிழில் வழங்குமாறு திசைச்சொல்லாக் கொள்ள இலக்கணிகள் இடந் தந்தாராயின், ஏராளமான பிறமொழிச் சொற்கள் யாதும் வரம்பின்றித் தமிழிற் கலந்து அதன் இனிமையையும் தனிமையையும் குலைத்துவிடுதல் திண்ணம். அதோடு அவை தமிழுக்கு இன்றியமையாதவை யென்றும், அவையின்றித் தமிழில் முற்றப் பொருளறிவுறுத்தலமையா தென்றும், எண்ணப்படும். ஆதலின் இலக்கணிகள் இடந்தந்திலர். இங்கிலீசு போன்ற மொழிகட்கே திசைச்சொற்கள் இன்றியமையாதவையாகும். தமிழிலிருந்த எத்துணையோ சொற்கள் வழக்கின்றி இறந்தொழிந்தன. ஆயினும் இற்றைக் காலத்தும், பிறசொற் கலவாது கருத்தெல்லாவற்றையும் உணர்த்த வல்லது தமிழ் ஒன்றேயாகும். ஆங்கிலத்தை வடமொழி யுதவியின்றித் தமிழில் மொழி பெயர்க்க முடியாதென்று சிலர் கருதுகின்றனர். மூலப்பகுதிகளினின்றும்