உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'காரம், காரன், காரி'

55

அதிகாரம் அதிகாரி என்னும் பொருளிலேயே காரம் காரி என்பனவும் பண்டைக்காலத்தில் வழங்கிப் பின்பு வழக்கற்றுப் போனதாகத் தெரிகின்றது. காரன் அல்லது அதிகாரன் என்பது ஆண்பாற் பெயராகவும், காரி அல்லது அதிகாரி என்பது பெண்பாற் பெயராகவும் இருந்திருக்கலாம். காரன் காரி என்பன அதிகாரப் பொருளை இழந்தபின், இருபாற் பெயரீறு களாக வழங்கிவருகின்றன.

இதுகாறுங் கூறியவற்றால், காரன் காரி என்னும் உயர்திணைப் பெயரீறுகள், உரியவரை யுணர்த்தும் தென்சொல்லே யன்றிச் செய்யப் படுவதை யுணர்த்தும் வடசொல்லல்ல வென்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்க.

காரம் என்னும் சொல், கடு என்னும் வினையின் திரிவான கரி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயராய், வன்மை, அதிகாரம், வலி, எரிவு, வெம்மை, உறைப்பு, சினம் முதலிய கடுங்குணங்களை யெல்லாம் உணர்த்தும் தூய தென்சொல்லாயிருந்தும், க்ஷார என்னும் வடசொல்லின் திரிவென்று சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளது.

வரி(tax) என்னும் தென்சொல்லைப் பலி (sacrifice) என்னும் வட சொல்லின் திரிவாகக் காட்டுவதோடமையாது, அதைத் தன் சிறப்புகளுள் ஒன்றாகத் தன் முகத்திலேயே எடுத்துக்காட்டிப் பெருமைகொள்ளும் அகரவரிசைக் களஞ்சியம் வேறெதைத்தான் கூறாதென்க.

மொழிநூல் மனப்பான்மையும் நடுநிலையும் பொதுமதியும் (common sense) ஒருங்கே யுடையாரெல்லாம் காரம் என்னும் சொற்கு யான் காட்டியுள்ள பொருளடைவையும் அதன் பொருத்தத்தையும் ஒப்புக் கொள்வாரென்று நம்புகின்றேன்.

"செந்தமிழ்ச் செல்வி" திசம்பர் 1956