உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

இலக்கணக் கட்டுரைகள்

“நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.' “ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரினது படல மாகும்”

என மேற்கொண்டனர்.

( நன்.16)

(நன். 17)

தொல்காப்பியர் காலத்திலிருந்து, படலம் என்னும் பெரும் பகுதி அதிகாரம் என்றும், ஓத்து என்னும் சிறு பகுதி இயல் என்றும், வழங்கி வரு கின்றன. அதிகாரம் என்பது அதிகரித்தல் என்னும் அதன் அடிப்படைப் பொருள்பற்றியே படலம் என்னும் பெரும் பிரிவைக் குறிப்பதாகும். அதிகரித்த பகுதி அதிகாரம். சிலப்பதிகாரம் என்பதும், சிலம்பு காரணமாக அதிகரித்த செய்தியைக் கூறுவது என்னும் பொருளதே.

காரம் என்னும் சொற்போன்றே அதிகாரம் என்னும் சொல்லும், மிகுதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, இருதிணைப் பொருள்க ளுள்ளும் ஒன்றையோ பலவற்றையோ ஆளுமுரிமையை அல்லது திறத்தை உணர்த்துவதாகும். வடமொழியில், அதிகாரம் என்னும் சொற்கு, ஆட்சி உரிமை முதலிய வழிப்பொருள்கள் கூறப்படுகின்றனவே யொழிய, மிகுதல் அல்லது அதிகரித்தல் என்னும் அதன் அடிப்படைப் பொருள் கூறப்படுகின்றிலது. அதோடு, மகனிலிருந்து தந்தை வந்தான் என்பதுபோல், அதிகாரம் என்னும் தொழிற்பெயரினின்று அதிகரி என்னும் வினைப் பகுதியைத் திரிப்பர் வடநூலார்.

இங்ஙனம் பின்னோக்கிய முறையிலேயே, அகங்கரி இளக்கரி என்பனவும், சென்னைப் பல்கலைக்கழக அகராதியில், முறையே அகங்காரம் இளக்காரம் என்னும் தொழிற்பெயர்களினின்று திரிக்கப்பட்டுள. அகங்கரித்தல் என்பது மனங்கடுத்தல் அல்லது தருக்குதல்; அகம்-மனம், கரித்தல்-மிகுதல். அகங்கரிப்பது அகங்காரம். வடமொழியில், அகங்காரம் என்பது நான் என்னும் அகப்பற்று. அகம் நான். காரம் செயல். எனது என்னும் புறப்பற்றை மமகாரம் என்பது போல, நான் என்னும் அகப்பற்றை அகங்காரம் என்பர். மம-எனது. இங்ஙனம் வடமொழி யகங்காரமும் தென்மொழி யகங்காரமும் சொல்லாலும் பொருளாலும் வேறுபட்டிருக்க, அவற்றை வடிவொப்புமை பற்றி ஒன்றெனக் கொள்வது அறியாமையே யாம். இளக்கரி என்பது இளம் கரி என்னும் இருசொற் கூட்டாகும். இளக்கரிப்பது இளக்காரம், இளம்-மென்மை, கரித்தல்-மிகுதல். உப்புக் கரித்தல் என்னும் கூட்டுச் சொல்லிலுள்ள வருமொழியே, அகங்கரித்தல் இளக்கரித்தல் என்பவற்றிலுள்ளதும் என அறிக. இளக்காரம் போன்றதே வலக்காரமும். வலக்கரிப்பது வலக்காரம். வலம்-சூழ்ச்சி, வலிமை.