உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

பண்பாட்டுக் கட்டுரைகள்

விலிருக்கும் வெங்கொடு நெருப்பேயாகும். சிவனுக்கிருப்பு மலையும் திருமாலுக்கிருப்பு (பாற்) கடலுமாதலால், சைவர்கள் எரிமலை வடிவாகவும் வைணவர்கள் (மாலடியார்கள்) கடல்கோள் வடிவாகவும் ஊழியிறுதி உலக அழிவைக் கூறுவர். உலகம் என்பது உலக முழுவதையுமேனும் அதில் ஒரு பாகத்தையேனுங் குறிக்கும். இந்துமா பெருங்கட லிருக்குமிடத்து முன்னொருகாலிருந்து இதுபோது நீர்க்கீழ் மூழ்கியுள்ள பண்டைத் தமிழ் நாட்டில், மூன்று பேரழிவுகள் நிகழ்ந்ததாகச் சங்கநூல்களா லறியக் கிடக்கின்றது. அம் மூன்றுங் கடல்கோள்களே. அவை முறையே தலைச் சங்கத்திறுதியிலும், இடைச்சங்கத்திறுதியிலும் கடைச்சங்கத்திறுதியிலும் நிகழ்ந்தவை.

அடுத்தடுத்து நெட்டிடையிட்டு மூன்று கடல்கோள்கள் நிகழவே, இவ்வகை யழிவு ஒவ்வோர் நெடுங்காலத்தின்பின் நிகழுமென்றெண்ணி அதற்கு ஊழியெனப் பெயரிட்டனர். (ஊழி = அழிவு. உலக ஊழியை அல்லது அழிவை எல்லையாகவுடைய காலத்தை ஊழியென்றது ஆகுபெயர்.) மூன்றாம் அழிவிற்குப் பிறகு இதுபோது நடக்குங் காலப் பகுதியை நாலாம் ஊழியென்றனர். தொல்காப்பியரின் காலத்தைக் குறிக்குமிடத்து "இவ் வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந் நூல் செய்தலின்” என்று (தொல். பொருள். கற்பியல் 4ஆம் சூத்திரவுரை) நச்சினார்க்கினியர் கூறியிருப்பதை உய்த்துணர்க.

இதுவே ஊழி, சதுரூழி என்னும் கால அளவுகள் தோன்றிய வரலாறாகும். இவற்றுக்குப் பிற்காலத்தார் வடமொழிப் பெயருங் கற்பனை யளவுங் கூறியதன்றிச் சதுரூழியைத் திரும்பத் திரும்ப நிகழுங் காலச் சக்கரமாகவுங் கூறிவிட்டனர்.

இப்போது நடக்கும் கலியூழி தோன்றி 5039 ஆண்டுகளாகின்றன என்று கூறப்படுகின்றது. சங்கநூல்கள் கூறும் 3ஆம் அழிவிற்குப்பின் 1800 ஆண்டுகளே கழிந்துள்ளன. 5039 ஆண்டு என்னும் கணக்கு உண்மை யாயின், அஃது 2ஆம் கடல்கோளிலிருந்து தொடங்கியதாகக் கொள்ளல் வேண்டும். முதல் கடல்கோட்கு முன்னும் சில கடல்கோள்கள் நிகழ்ந்திருக் கலாம். இங்ஙனம் சரித்திரத்திற்கெட்டாத பல தொன்முது கடல்கோள்கள் பண்டைத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தமை ஸ்காட் எலியட் என்பவர் எழுதிய 'மறைந்த லெமூரியா'(Lost Lemuria) என்னும் நூலா லறியப்படும். ஆதலால், எவ்விதத்தும் ஊழிக்கணக்கு மேற்கூறிய முறையைத் தழுவியதே யென்பதற்கு யாதும் இழுக்கின்று. ஆகவே, நாள் முதல் ஊழியீறான எல்லாக் கால அளவும் ஒவ்வோர் அழிவை எல்லையாக வுடையவென்றும், எல்லாக் கால அளவுகட்கும் ஆதாரமான நாளானது ஓர் அழிவில் முடிவதால், அதற்கு மேற்பட்ட எல்லாப் பேரளவுகளையும் அங்ஙனமே ஒவ்வோர் அழிவில் முடிவனவாக அமைத்துக்கொண்டனர் என்றும் அறிந்துகொள்க.

"செந்தமிழ்ச் செல்வி" மடங்கல் 1939