உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(10)

வேளாளர் பெயர்கள்

எம்மொழியினும் சொற்களின் மூலப்பொருளை யுணர்தற்கு மொழி நூலறிவு இன்றியமையாததாகும். ஒருவர் எத்துணைப் பெரிய புலவரா யிருப்பினும் மொழிநூலறிவின்றி எல்லாச் சொற்கட்கும் உண்மைப் பொருள் கூறவொண்ணாது.

தமிழில் வேளாண் குலத்திற்குரிய பெயர்களிற் சிலவற்றிற்குப் போலிப் பொருள்கள் கூறப்பட்டு வருகின்றன. அவற்றை விலக்குவதுடன் பிற பெயர்களையும் விளக்குவதற் கெழுந்ததிக் கட்டுரை.

மக்கள் முதன்முதற் குறிஞ்சி நிலத்தினின்றே பிற நிலங்கட்கெல்லாஞ் சென்று பரவினர். அவருள் மருதநிலத்திற்கு வந்தவர் முல்லை வழியாய் வந்தனர். குறிஞ்சி கன்னிலமாதலின் அதையடுத்து மென்னிலமாகிய மருத மிருத்தல் இயலாது; வன்னிலமாகிய முல்லை யிடையிட்டே யிருக்கும். உழவுத்தொழில் குறிஞ்சிநிலத்தில் தினை விளைத்தலாகிய சிற்றளவில் தோன்றி, முல்லைநிலத்தில் புன்செய்க் கூலங்கள் விளைத்தலாக வளர்ந்து, மருதநிலத்தில் நன்செய்ப் பயிர்கள் விளைத்தலாக முதிர்ந்தது.

மருதநிலத்தில் வந்து உழவுத்தொழில் ஒன்றையே சிறப்பாகச் செய்தவர்கள் உழவரென்றும், களத்தில் வேலை செய்தமையால் களம ரென்றும், பிற நிலத்தார் போலாது நிலையாய்க் குடியிருந்தமையால் குடியானவரென்றும் கூறப்பட்டனர். பின்பு நிலமிகுந்தவர்கள் பிறரைக் கொண்டு உழுவித்துண்டும், நிலங் குறைந்தவர்களும் அற்றவர்களும் தாமே உழுதுண்டும் வந்தனர். இவர் முறையே இற்றைப் பண்ணையாரும் (மிராஸ்தார்) பண்ணையாள்களும் போல்வர். இவர் பிற்காலத்தில் இருவேறு குலமாய்ப் பிரிந்தனர். இவரையே இருவகை வேளாளரென்று தொல்காப்பிய அகத்திணையியல் 30ஆம் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர்.

ம்

இவருள் உழுதுண்பார் வெளியே சென்று வெயிலிற் காய்ந்து வேலை செய்து, கருத்திருந்தமையின் கருங்களம ரெனப்பட்டார். உழுவித்துண்பார் வீட்டில் அல்லது நிழலிலிருந்து வெளுத்திருந்தமையின் வெண்களம ரெனப்பட்டார். மக்கள் பல்வேறு குலங்களாய்ப் பகுக்கப்பட்டமைக்குத் தொழிலும் நிறமும் முக்கியக் காரணங்களாகும். மேலைக் குலநூல் வல்லார் உலக மக்களை ஐவகுப்பாய் வகுத்ததும் நிறம்பற்றியே.