உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேளாளர் பெயர்கள்

73

கைத்தொழிலிற் பயின்று கருத்த அல்லது உரத்த கைகளைக் கருங்கையென்று சொல்வது பண்டை வழக்கு. 'கருங்கை வினைஞர்’, 'கருங்கைக் கொல்லன்' என்னும் நூல் வழக்குகளை நோக்குக.

வெண்களமர் என்னுமிடத்து, வெண்மை என்பது மேனாட்டார் நிறம்போல மிகுவெண்மையைக் குறியாது பொன்மையை அல்லது வெளிறின செம்மையையே குறிப்பதாகும். ஆரியப் பிராமணர் வேளாள ரினும் வெளிறியிருப்பினும், அவர் (வடநாட்டினின்று) பிந்தி வந்தமை யாலும், இக்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஐரோப்பியர் போலத் தமிழரோடு கலவா திருந்தமையாலும், உழுவித்துண்ணும் வேளாளரை வெண்களமர் என்ற வழக்கு வீழ்ந்திலது.

கருங்களமர், வெண்களமர் என்ற பெயர்கள் போன்றே, காராளர், வெள்ளாளர் என்ற பெயர்களும் நிறம்பற்றி முறையே இருவகை வேளாளர்க் கும் ஏற்பட்டன. இவற்றிற்குக் காரை (மேகத்தை) யாள்பவரென்றும், வெள்ளத்தை யாள்பவரென்றும் முறையே பொருள் கூறுவது பொருந்தாது. இவை பார்த்தமட்டில் அல்லது கேட்டமட்டில் பொருத்தமாய்த் தோன்றலாம். ஆனால், மொழிநூல் முறையில் ஆராய்ந்து பார்ப்பின் அவை போலி யென்பது புலனாம்.

காராளர் என்ற பெயர்ப்பொருளை அறிதற்கு, அதை அதற்கு எதிரான வெள்ளாளர் என்னும் பெயரோடு ஒப்புநோக்குதல் வேண்டும். மீண்டும், அவ் விரண்டையும் கருங்களமர், வெண்களமர் என்னும் பெயர்களுடன் ஒப்புநோக்குதல் வேண்டும்.

கருமை + ஆளர் = காராளர்.

இத் தொடரைக் காரா(கரும்பசு), காரரிசி, காரகில், காராடு முதலிய தொடர்களுடன் வைத்து நோக்குக.

வெண்மை + ஆளர் = வெள்ளாளர்.

இத் தொடரை வெள்ளாடு, வெள்ளெருக்கு, வெள்ளானை, வெள் ளோலை முதலிய தொடர்களுடன் வைத்து நோக்குக.

வெள்ளாளரை வெள்ளாம்பிள்ளை யென்பதும், அவர் குடியை வெள்ளாங்குடி யென்பதும் உலக வழக்கு. வெள்ளை என்னும் பெயர் இங்ஙனம் ஈறுகெட்டு 'ஆம்' சாரியை பெற்றுச் சில தொடர்மொழிகளில் நிலைமொழியாவதை "வெள்ளாங் குருகின் பிள்ளை" என ஐங்குறு நூற்றிற் (16ஆம் பத்து) கொக்குக் குஞ்சினைக் கூறியதனின்றுங் கண்டு கொள்க. வேளாளர் என்னும் பெயர் வேறு. அது பின்னர்க் கூறப்படும்.

வெள்ளாண் மரபு, வேளாண் குலம் என்பவற்றில் ஆண் என்பது ஆள், என்பதன் திரிபு. ஆகையால், வெள்ளாம்பிள்ளை, வெள்ளாண் பிள்ளை என்னும் பெயர்கள் வெவ்வேறு இடைமொழியைப் பெற்றனவாகும்.