உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்

தமிழ் வேற்றுமையமைப்பு

எமக்குத் தெரிந்தவரை, தமிழிலும் தமிழைப்பற்றியும் இதுகாறும் எழுதியுள்ளவராய் இதுபோது அறியப்படும் நூலாசிரியருள், தொல் காப்பியர், திருவள்ளுவர், கால்டுவெல், மறைமலையடிகள் என்னும் நால்வரே நாயகமாணவர். இவருள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் ஒப்புயர்வற்ற தனிப்பேராற்றலர் ஆயினும், மூவகை நூலினும் முதனூலே சிறந்தது என்னும் முறைமை நோக்கின், திருவள்ளுவரும் கால்டுவெலும் ஏனையிருவரினும் திகழ்ந்து தோன்றுவர்.

இலக்கணத்திலும் வேறாக மொழி நூல் என ஒரு தனிநூல் அறியப் படாது. நாவலந்தேய மொழிகளெல்லாம் தேவமொழியான சமற்கிருதத்தின் திரிபென்று பெரும்பால் தமிழராலுங் கொள்ளப்பட்டிருந்த காலத்தில், திரவிட மொழி இத்துணை என வகுத்துக் காட்டியும் அவை ஆரியத்திலும் வேறெனப் பிரித்துக் காட்டியும், திரவிட மொழித்துறைத் திண்ணிருளைப் போக்கிய மேலைக் கதிரவன் கால்டுவெல் கண்காணியா ராவர். ஆயினும், “ஆணைக்கும் அடி சறுக்கும்” ஆதலின் பிராமண வருகைக்கு முந்திய பழந் தமிழ் நூல்களெல்லாம் இறந்துபட்டு, ஆயிரக்கணக்கான தூய தென் சொற்கள் அழிவுற்று, பல்வேறு துறையிலும் தமிழர் தாழ்வுண்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூற்பயிற்சி குன்றி குமரி நாட்டுண்மை மறைந்திருந்த பெருவழுக்கலில் வழிகாட்டியின்றிச் செல்ல வேண்டியிருந்ததால், இரண்டோர் இடத்தில் சறுக்கிவிழ நேர்ந்தது. எனினும் அது எட்டுணையும் அவரது அருந்தொண்டின் பெருமையைக் குறைக்காது. தவறுவது மாந்தன் யல்பே, ஆராய்ச்சியில்லாத மாணவரின் ஐயமறுத்தற்பொருட்டே, அவருடைய சறுக்கல்கள் இங்கு எடுத்துக் காட்டப்பெறுகின்றன என்க.

காட்டப்பட்டுள்ள காரணம்பற்றி, திரவிடத்திலுள்ள இலக்கண முள்ளிட்ட எல்லா உயர் நூல்களும் கலைகளும் ஆரிய மொழியினம் என தவறான முன் முடிபுகொண்டுவிட்டதினாலேயே, தமிழ் இலக்கண வேற்றுமையமைப்பு வடமொழியிலக்கண வேற்றுமையமைப்பைத் தழுவியதெனப் பின்வருமாறு தவறாக வரைந்துள்ளார் கால்டுவெல் கண்காணியார்.