ஆய்தம்
47
ஆரிய வன்மை சான்ற வல்லெழுத்துக்கள் தமிழுக்கின்மையின், ஆய்தத்தை வடமொழி ஹகரம் (h) போன்ற மூச்சொலியாகக் கொள்வது முற்றும் தவறாம். இனி வடமொழி விசர்க்கம் (.) போன்ற ஒலியெனக் கொள்ளின், ஒலியளவில் விசர்க்கம் ஆய்தத்தை யொத்திருப்பினும், அதில் அகரக் கூறும் கலந்திருப்பதால், அதுவும் பொருந்தாதென்க. ஆய்தம் எவ்வகையினும் உயிரேறப்பெறா எழுத்தாம் “குறியதன் முன்ன ராய்தப் புள்ளி” என்னும் நூற்பா வுரையில், "ஆய்தமான புள்ளி, 'ஆய்தப்புள்ளி’ என்றார், இதனையும் ஒற்றின்பாற் சார்த்துதற் கென்க. ஒற்றேல் உயிரேறப் பெறல் வேண்டுமெனின், சார்பெழுத்தாதலின் உயிரேறப் பெறாதெனக் கொள்க” என மயிலைநாதர் உரைத்திருப்பதைக் காண்க.
"ஆய்தம் (“அற்றாலளவறிந் துண்கவஃதுடம்பு” முதலிய இடங்களில் உயிர்போல அலகு பெற்றும், "தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்” முதலிய இடங்களில் மெய்போல அலகு பெறாமலும் உயிர்மெய்களை (ஒருபுடையொத்து) உயிருமாகாமல் மெய்யுமாகாமல் (அலிபோலத்) தனிநிற்றலால், 'தனிநிலை' எனப்பட்டது” என்றார் நன்னூற் காண்டிகை யுரைகாரராகிய சடகோபராமானுசாச்சாரியார். “அற்றாலளவறிந் துண்க வஃதுடம்பு” என்னும் பாடத்திற்கு ஆய்தம் அலகு பெறல் வேண்டாமை யானும், அவ்வாச்சாரியாரே “உயிரும் மெய்யும் தம்மிற் கலத்தல் போல ஆய்தம் ஓரெழுத்தோடுங் கலத்தலின்றித் தனி நிற்றலால் தனிநிலை யெனப்பட்ட தென்றலு மொன்று,” எனக் கூறியிருத்தலானும் அவ்வுரை பொருந்தாதென்க. ஆய்தம் ககரத்தின்பாற்பட்ட ஒர நுண்ணிய வொலி யாயிருத்தல் பற்றியே அப்பெயர் பெற்றதென் றறிக.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்’
(உரியியல், 32)
என்பது தொல்காப்பியம். ஆய்தப் பெயர்க்காரணங் கூறுமிடத்து, “that which is subtle, minute" என்றார் கால்டுவெலும்.
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி, தான் கொண்ட குறிக்கோட்கொப்ப, தமிழ்ச் சொற்களைத் தமிழ்வழி ஆராயாது, ஆய்தம் என்னும் தென்சொல்லைச் சார்ந்திருக்கை யென்று பொருள்படும் ஆசிரிதம் என்னும் வடசொற்றிரிபா யிருக்கலாமெனக் கருதி மயங்குகின்றது. குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்றாயிருக்க, அவற்றுள் ஒன்றிற்கு மட்டும் சார்ந்திருக்கைப் பொருட்சொல் எங்ஙனம் பெயரா யமைந்திருத்தல் கூடும்? வடமொழியைத் தமிழுக்கடிப்படையாய் வைத்து, ஒலி முறைச் சொல்லியல் (Sound Etymology) பற்றித் தென்சொற்கள் பலவற்றை வடசொல்லெனக் கூறுவது, வடமொழியாளர்க்குத் தொன்று தொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது.
இனி, ஆய்தம் என்னும் தென்சொல்லை ஆயுதம் என்னும் வடசொல் லொடு மயக்கி, அடுப்புக்கூட்டும் கேடகம் மூவிலைச் சூலம் ஆகிய