உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

மொழிநூற் கட்டுரைகள்

குழு என்னும் வேரினின்றே குழாம், குழுமம் முதலிய பல்வேறு தொகுதிப் பெயர்கள் தோன்றியிருப்பினும், அவையாவும் பருப்பொருளி லன்றி நுண்பொருளில் ஒத்தனவல்ல.

வகுப்பு.

குழு = சிறுகூட்டம் (Committee).

குழூஉ = மறைபொருட் குறியீடு வழங்கும் தொழிற் குலம் அல்லது

குழாம் = குழுவினும் சற்றுப் பெரிய கூட்டம் (Party).

கோஷ்டி என்னும் வடசொற்கு நேரான தென்சொல் குழாம். பஜனைக் கோஷ்டி என்பதைத் திருப்பாட்டுக்குழாம் என்னலாம். குழுமல், குழுவல் = குழாத்தினும் பெரிய கூட்டம் (Gathering). குழுமம் = வணிகர் சங்கமும் தொழிலாளிகள் சங்கமும் போன்ற கூட்டம் (Guild).

குழும்பு = யானைநிரை தோழமைக் கூட்டம் (Herd, Company) “களிற்றுக் குழும்பின்” (மதுரைக். 24).

கழகம் = சங்கம் (Society Association).

ஆகவே, குழு, குழூஉ, குழாம், குழுமம் என்பன முறையே ஒன்றி னொன்று பெரிய தொகுதிகளாம். கழகம் என்பது உயர்திணைக்கே யுரியதாய்ப் பெரும்பாலும் கல்விபற்றியதும் நிலையானதும் குழுமத்திற்குச் சமமானது மான கூட்டத்தையே குறிக்கும். இதனாலேயே, பண்டைத் தமிழ்ச் சங்கத்தைக் கழகம் என்றார் பரஞ்சோதி முனிவர். தலைக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்; இடைக்கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மர்; கடைக் கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர். ஆகவே, கழகம் என்பது சிறு குழுவைக் குறிப்பதன்று.

இனி சூதாடு கருவிக்குக் கழங்கு, கழங்கம் எனப் பெயரிருப்பதால், கழங்கம் அல்லது கழங்ககம் என்னுஞ் சொல் கழகம் எனத் தொக்குச் சூதாடு மிடத்தைக் குறித்ததோவென ஐயுறவும் இடமுண்டு. ஆயினும், ஆய்ந்து நோக்குவார்க்கு, மேற்காட்டிய வரலாறே உண்மையான தென்பது புலனாம்.

இதுகாறுங் கூறியவற்றால், கழகம் என்பது குழு என்னும் வேரடியாய்ப் பிறந்ததென்றும், கூட்டம் அல்லது கூடுமிடம் என்பதையே அடிப்படைப் பொருளாகக் கொண்டதென்றும், முதற்கண் கற்றோரவையை அல்லது கற்போர் கூட்டத்தைக் குறித்த பின்னர்ச் சூதாடுமிடத்தைக் குறித்ததென்றும், சங்கம் என்னும் வட சொற் பொருளில் தொன்று தொட்டு வழங்கிய தூய பழந்தமிழ்ச் சொல்லென்றும், பண்டையிலக்கியம் முற்றும் இறந்துபட்ட இக்காலத்தில் திருக்குறளைக் கொண்டு சொற்பொருள் வரிசையைக் காணமுடியாதென்றும், சொல்லாராய்ச்சியின் துணையினாலேயே அதைத் துணிதல் கூடுமென்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க.