உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழகமெல்லாம் சூதாடுமிடமா?

93

புலவரவையைக் குறித்தது. சங்கம் என்னும் வட சொற்கு நேர் தென்சொல் கழகம் என்பதே.

பழம் பாண்டி நாட்டு முத்தமிழ்க் கழகங்களும் தமக்கு முந்திய தமிழிலக்கியத்தை ஆராய்ந்து வந்ததினால், கற்றோர் பயிலும் இடத்தைக்குறித்த கழகம் என்னும்சொல், நாளடைவில், கற்போர் பயிலும் இடத்தையும் குறிக்கத் தலைப்பட்டது. “அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப.”, “அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப.”, "அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப”, என்று இறையனாரகப் பொருளுரை. முறையே முத்தமிழ்க் கழகங்களையும் பற்றிக் கூறுதல் காண்க. இதனால், இளைஞர் கல்வி பயிலுமிடத்தை.

“கந்தனை யனையவர் கலைதெரி கழகம்”

என்றார் கம்பர் (கம்பரா. நாட்டுப். 48). இனி, ஈண்டைக் கழகம் என்னும் சொற்கு, விற்கலை மற்கலை முதலிய போர்த்துறை பயிலும் இடம் எனவும் பொருளுரைப்பர். அதுவே கம்பர் கருத்தாயின் போர்க்கலையையும் கல்வித் துறைகளும் ஒன்றாக அடக்கிக்கொள்க. திவாகரம், படைக்களம் மற்போர் முதலியன பயிலும் இடத்தையும் கழகம் எனக் குறிக்கும்.

ஏர்க்களத்திலும் அவைக்களத்திலும்போல் போர்க்களத்திலும் மக்கள் கூடுவதால், களம் என்னும் சொல் அம் மூன்றிடத்தையும் குறித்ததென முன்னர்க்கண்டோம். சூதாடுதற்கும் மக்கள் கூடுவதாலும், சூதும் ஒரு வகைப் போராதலாலும் கழகம் என்னும் சொல் மூன்றாவதாக அல்லது இறுதியாகச் சூதாடுமிடத்தையும் குறித்தது. சூதும் ஒரு வகைப் போர் என்பதைச் சூது பொருதல் என்னும் வழக்கினாலும், சூது போர்ச்சருக்கம் என்னும் வில்லி பாரதச் சருக்கப் பெயராலும், உத்தியாலும், அறியலாம். வேத்தவையிலுள்ளா ரெல்லாம் ஒவ்வொரு துறையில் தேர்ச்சி பெற்றிருப்பராதலின், ஓலக்கமும் புலவரவையின் அடங்கும். ஆகவே, புலவரவை, கல்வி பயிலிடம், சூதாடு மிடம் ஆகிய மூவேறு பொருளைக் கழகம் என்னும் சொல் குறிக்கும் என்பது தெளிவாம்.

பழகிய செல்வமும் பண்புக் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.”

(937)

என்னுங் குறளில், சூதாடுமிடத்தையும், “கழகத் தியலுங் கவற்றி னிலையும்” என்னும் புறப்பொருள் வெண்பாமாலைத் தொடரில் (358), சூதாட்டையும், கழகம் என்னும் சொற் குறித்தது.

இங்ஙனங் குறிப்பினும் இது அருகிய வழக்கே, இற்றை உலக வழக்கிலும், நாட்டாண்மைக் கழகம், செந்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மாணவர் கழகம், எனக் கழகம் என்னும் சொல் சூதாடு களமல்லாத பிற களரிகளையே குறித்தல் காண்க.