உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வண்ணனை மொழிநூல்

21

அவர்கள் என்னும் சொல்லின் கொச்சை வடிவுகளான அவக, அவுக, அவிக, அவிய, அவியல் அவங்க, அவுங்க, அவிங்க, அவா என்பவற்றை யெல்லாம் அளவையாகக் கொண்டு ஆராய்வதினும், நகராண்மைக் குப்பையைக் கிண்டிக் கிளைப்பது நன்மைபயக்குமே!

தமிழைத் தமிழ்நாட்டில் தக்கார் வாய்க்கல்லாது அமெரிக்கா சென்று ஆய்வதற்குத் தமிழொலிகளைத் தவறாக வையாபுரிகள் வாய்க் கேட்டுப் பதிவு செய்த ஒலிப்பெட்டிகளன்றி வேறு அங்கு என்னுள்ளது? உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆராயாது சில ஒலிக்குறிகளை மட்டும் அமெரிக்காவிற் கற்றுவந்ததினால் என்ன பயன்? அக்குறிகளை இங்கிருந்தே கற்கலாமே!

தமிழர் பேசுவதெல்லாம் தமிழெனின், ஸ்கூல், காலேஜ், கிளாஸ். டிவிஷன், பீரியடு, ஹெட்மாஸ்ட்டர், சார், (Sir) புக், நோட்புக், பேப்பர், பென், பென்சில், ரப்பர், பேக்கு, (bag) கார்டியன் லீவு, லேட் (Late), டிராயிங், சயன்சு முதலிய செயல்களெல்லாம் தமிழாதல் வேண்டுமே! அங்ஙனமாயின், தமிழ் ஆங்கிலத்தின் கிளைமொழியாவன்றோ மாறிவிடும்! அங்ஙனம் மாறாமை அனைவரும் அறிவர். ஆதலால், இடைக்காலத்திருண் நிலையில் ஏற்பட்ட கேட்டையும் அதன் வழிவந்த தீங்குகளையும் அறவே நீக்கி, தமிழைப் பண்டுபோல் தூய்மைப் படுத்துவதே, அறிவாராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் மிக்க இற்றைத் தமிழர்க் கேற்றதாம்.

இனி, மலைவாணரான திரவிடரெல்லாம் பழங்குடி மக்களென்றும், அவர்கள் பேசுவன முந்திய மொழிகளென்றும், தமிழ் வல்லினம் வடமொழி ஐவருக்கமுதலொலிகளை யொத்ததென்றும், தமிழ் அரிவரி வடமொழி நெடுங்கணக்கைப் பின்பற்றியதென்றும், சில தவறான கருத்துகள் மேலை மொழி நூலறிஞரிடைத் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன.

இவற்றையெல்லாம் மறுப்பின் மற்றொன்று விரித்தலாகும்.

ஆயினும், குறிஞ்சி நிலத்திலுள்ள மாந்தர் தமிழர் நாகரிக வளர்ச்சியின் முதல் நிலையை தாங்கி நின்ற காலம் முழுகிப்போன குமரிக்கண்டத்திலேயே கடந்து விட்டதென்றும், இற்றை நாவலந்தேய மலைவாணரெல்லாம் மலையடிவாரத்தில் மாடுமேய்த்தும் உழவுத்தொழில் செய்தும் வந்து அக்காலத்து அடிக்கடி நிகழ்ந்து வந்த போருக்கும் கொள்ளைக்கும் தப்புமாறு மலைமேற்சென்று வாழ்ந்தவர் வழியினரென்றும்; தமிழ் வல்லின வொலிகள் வடமொழி ஐவருக்க முதலொலிகளினும் மெல்லியவென்றும்; தமிழ் நெடுங் கணக்கே வடமொழி நெடுங்கணக்கிற்கு மூலமென்றும்; ஈண்டைக்கறிந்து கொள்க.

இதுகாறுங் கூறியவற்றால், வரலாற்றைச் சிறிதும் நோக்காது, வட மொழியைத் தலைமையாகவும் திரவிடமொழிகளையெல்லாம் ஒன்றோ டொன்று சமமாகவும் கொண்டு, தமிழுக்குக்கேடு விளையுமாறு கொச்சைச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் அளவைப்படுத்துவதே வண்ணனை மொழி நூலின் இயல்பென்றும், இது தமிழைக் காட்டிக் கொடுத்துத் தந்நலம் பெருக்கும் வையாபுரிகட்குத் தலையாய வாய்ப்பென்றும், கண்டுகொள்க.