உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

பொருட் பாகுபாடு

பொருள்களைச் சினை, குணம், தொழில் முதலியனபற்றிப் பல வகையாக வகுத்துக் கூறல் பொருட் பாகுபாடாகும். இதுவே எந்தக் கலையறி விற்கும் ஆராய்ச்சிக்கும் தொடக்கமாம். ஒரு பொருளைப்பற்றிச் சிறப்பா யாராயுமுன், அது எந்த இனத்தைச் சேர்ந்ததென்று அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

தற்காலத்தில், பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் மேனாட்டார் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முற்காலத்திலோ இந்நிலையைக் கீழ்நாட்டார், சிறப்பாகத் தமிழர், அடைந்திருந்தனர்.

பண்டை தமிழர், பொருள்களெல்லாவற்றையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அவற்றை வகுத்துக் கூறல் ஓரினப்படுத்தல் வேறினப்படுத்தல் என்னும் மூவகையிலும் வகையீடு செய்தது மிகப் போற்றத்தக்கதாகும். 1. வகுத்துக் கூறல்

(1) இருவகைப் பொருள்-இயங்குதிணை, நிலைத்திணை.

எல்லாப் பொருள்களையும் இடம் பெயர்வதும் பெயராமையும் பற்றி இயங்குதிணை நிலைத்திணை என இரண்டாய் வகுத்துக் கூறினர். இவற்றை முறையே சரம் அசரம் என்றும் சங்கமம் தாவரம் என்றும் கூறுவர் வடநூலார். இயங்குதிணை உயிருள்ளது மட்டும். நிலைத்திணையில் உயிருள்ளதும் இல்லதும் அடங்கும்.

(2) மூவகைப்பொருள்-உயிர், மெய், உயிர்மெய்.

எல்லாப் பொருள்களும் தனியுயிர், தனியுடம்பு, உயிருள்ள உடம்பு என மூவகைப்படும். இவற்றை முறையே உயிர் மெய் உயிர்மெய் என்றனர் பழந்தமிழர். கடவுளும் பேயும் உடலைப் பிரிந்த ஆவியும் தனியுயிர்; பிணமும் உயிரற்ற அஃறிணை யுடம்பும் உயிரற்ற பொருளும் தனிமெய்; உடம்போடு கூடி வாழும் மக்கள் விலங்கு பறவை முதலியன உயர்மெய். உயிர்மெய் என்னும் சொல் இன்று வழக்கற்று, அதற்குப் பதிலாகப் பிராணி என்னும் வடசொல் வழங்கி வருகின்றது. பிராணனையுடையது பிராணி, உயிரையுடைய மெய் உயிர்மெய்.