உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உவமை தென்சொல்லே

75

உவமயியலை பயன்படுத்திக் கொண்டதுடன் உவமை என்னும் பெயரையும் 'உபமா' எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப்பியம் பாணினீயத்திற்கு முந்தியதென்னும் உண்மை ஒப்புக் கொள்ளப்படாவிடினும், தொல்காப்பியம் கடைக்கழகத் தொடக்கத்தெழுந்த வழி நூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்கட்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ஐந்திரம் பாணினீயம் முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும் தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்துச் சொற் பொருள் மூன்றையுங் கூறும் பிண்டங்கள் என்றும் வேறு பாடறிதல் வேண்டும். வடமொழியில், யாப்பிலக்கணம் சந்தசு அல்லது சந்தோபிசிதி என்னும் நூல்களிலும், அணியிலக்கணம் அலங்காரம் என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ, யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள். அவை தனி நூற்களிற் கூறப்பட்டவிடத்தும், பொருள் இலக்கணக் கூறுகளாகவே என்றுங் கொள்ளப் பெறும். உவமை அணிகட்கெல்லாம் தாயாதலால், அணியிலக்கணம் உவமயியல் அடக்கமாம்.

தொல்காப்பியர் உவமவியலில் நால்வகை ஏனையுவமங்களும் ஐவகை உள்ளுறை உவமங்களும் கூறப்பெற்றுள்ளன; உவமை உறுப்புகள் மாணவர்க்கு எளிதாய் விளங்குவனவாதலால் கூறப்பெறவில்லை. ஆயின், எச்சவியலில் உவமத்தொகை கூறப்பட்டிருப்பதால் அதன் மறுதலையாகிய உவம விரியும் கூறாமல் கூறப்பட்டதாகக் கொள்ளப் பெறும்.

உருபு

உவமம், உவமவுருபு பொதுத் தன்மை, பொருள் என்னும் நான்கும் உவமை உறுப்புக்களாம். இந்நான்கும் அமைவது விரியுவமை; உவம உ அல்லது உவமவுருபும் கொதுத் தன்மையும் குறைவது தொகையுவமை. வடமொழியில் இந்நான்கையும் முறையே, உபமான, உபம் வாசக, சாதாரண தர்ம, உபமேய என்றும்; விரியுவமத்தைப் பூர்ணோபமா என்றும்; தொகை யுவமத்தை ‘லுப்தோபமா' என்றும் அழைப்பர். இவையெல்லாம் பிற்காலத்து வளர்ச்சியும் மொழி பெயர்ப்புமாகும்.

இது காறும் கூறியவற்றால் 'உவமை' தென்சொல்லே என்றும் உவமயியல் தென் மொழியிலக்கண கூறே என்றும் தேர்ந்து தெளிக. தாழ்வுணர்ச்சி நீங்குக! தலை நிமிர்க!