உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகத் தமிழ்க் கழகக் கொள்கை

65

னர் போன்ற புதுப்புனைவாளரும் ஆள்வினைத் தலை வரும் பேரறிஞ ரும் அருஞ்செயன் மறவரும், தண்டவாளத்தின்மேல் தலை வைப்பது மில்லை; என்றேனும் வைக்கக் கருதுவதுமில்லை. ஆதலால், சிறுவருஞ் செய்யக்கூடிய அச் சிறுசெயல் பெரியோரின் பெருமைக்குச் சான்றாகாது. அறிவு, ஆராய்ச்சி, சொல்வன்மை, அன்பு, தொண்டு, நடுநிலை, குடிசெயல், தாளாண்மை, ஆள்வினைத்திறம், தறுகண்மை, ஈகைத்தன்மை, தன்மானம், பரந்த நோக்கு, பெருந்தன்மை முதலிய பண்பாட்டுக் குணங்களையே ஒருவர் பெருமைக்கும் தலை மைக்கும் சான்றாக எடுத்துக்காட்டல் வேண்டும்.

ஒரு நாடு முன்னேறுவதற்கு மொழியே வழியாம். தமிழ் தாழ்த்தப் பட்டதே தமிழன் தாழ்ந்ததற்குக் கரணியம். தமிழன் உயர்வடைய வேண்டு மாயின், தமிழ் மீண்டும் குமரிநாட்டிற்போல் தழைத்தோங்க வேண்டும். தமிழ் என்பது தனித் தமிழே; திரைப்பட மொழியன்று. தமிழைப் போற்றா தவன் தமிழனல்லன். தமிழை அழிக்க விரும்புபவர் பேராயத்தார்போல் தாமே அழிந்து போவர். ஆதலால், தமிழ் மீண்டும் அரியணையேறு வதுபற்றி ஐயுறவேண்டா. தி.க.விலிருந்து தி.மு.க. தோன்றியது போன்றே தி.மு.க.விலிருந்து நாளடைவில் த.த.க. (தனித்தமிழ்க் கழகம்) தோன்றும். அன்றே தமிழாட்சி தொடங்கி உலகுள்ளவும் நிலைத்து நிற்கும்.

உலகத் தமிழ்க் கழகம் கையாளும் குறிக்கோட் பண்புகள் எண்மை எளிமை (simplicity), உண்மை உண்மை (sincerity) தன்னலமின்மை (selfless- ness) தொண்டு (service), ஈகம் (sacrifice) என்னும் ஐந்தாகும்.