உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை

31

இவற்றுள் பொருள் பற்றிய பகுதியில் செய்யுள் இயற்றும் முறையும் அணிவகைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே தொல்காப்பியம் ஐந்திலக்கணம் கூறும் நூல். இந்த ஐவகை இலக்கணத்தையும் பண்டைத் தமிழர்கள் 'இயல்' என்று வழங்கினர். இயற்றமிழுடன் பண்ணும் தாளமும் சேர்ந்ததை இசைத்தமிழ் என்றனர். இசைத்தமிழுடன் நடிப்பும் கூடியதை நாடகத்தமிழ் என்று கூறினர். இவ்வாறு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் தலைக்கழகக் காலத்தில் புலவர்களால் போற்றி வளர்க்கப் பட்டன.

னால், காலப்போக்கில் இவ்வளர்ச்சி வரவரக் குறைந்து கொண்டே வந்துள்ளது என்று கருத இடமுண்டு. எப்படியென்றால், இடைக்கழகக் காலத்தில் நாடகத் தமிழ்பற்றிய ஆர்வம் குறையப்பெற்று இயலும் இசையுமே பேணிக் காக்கப்பட்டன என்று அறிகிறோம். மற்றும், கடைக் கழகக் காலத்திலோ, இசையின் இன்றியமையாமை மறக்கப் பெற்றதால், இயற்றமிழில் மட்டுமே நாட்டம் செலுத்தப்பட்டதை நன்கு உணர்கிறோம்.

அதுமட்டும் அன்று, புலவர்களின் எண்ணிக்கையும் வரவரக் குறைந்து வந்துள்ளது. முதற்சங்கம் - அஃதாவது தலைக்கழகம் இருந்தது பஃறுளியாற்றின் கரையில் அமைந்த தென்மதுரையில் எனலாம். பஃறுளி என்பது குமரிமலையின் அடிவாரத்தையொட்டிப் பாய்ந்த ஓர் ஆறாகும். இந்த மதுரைச்சங்கத்தில் சிறந்த புலவர்கள் 549 பேர். இவர்கள் மிகுந்த திறமையும் தகுதியும் பெற்றவர்கள். இக்காலத்துப் புலவர்களைப் போலச் செய்யுள் எழுதுபவர்கள் அல்லர், இவர்கள்! செய்யுளால் பாடுபவர்கள்; செய்யுளால் பேசுபவர்கள்! இவர்களைத் தவிர, திறமை குன்றிய தமிழ்ப்புலமை முற்றப்பெறாத புலவர்களும் இக்கழகத்தில் இருந்திருக் கின்றனர்.

இடைக்கழகக் காலத்தில் இத்தகைய பெரும் புலவர்களின் எண்ணிக்கை 59 ஆகக் குறைந்துவிட்டது. கடைக்கழகக் காலத்திலோ இன்னும் குறைந்து 49 ஆகிவிட்டது!

ஏனிந்த நிலை என்று எண்ணிப் பார்த்தால், தமிழகத்தின் பரப்பு வரவரச் சுருங்கி வந்ததே தகுந்த காரணம் என்பது புலப்படும். கடலில் மூழ்கிப்போன பண்டைத் தமிழகத்தின் நீளம் மட்டும் 2000 கல் தொலைவு எனலாம். இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே இருந்த இந்நிலப்பரப்பின் பெரும் பகுதி, தலைக்கழகத்தின் இறுதியில் கடலில் மூழ்கி மறைந்தது. இதுதான் தமிழகத்தில் நடந்த பெரிய கடல்கோள்!

இந்தக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியனே கபாடபுரத்தில் - இதன் பழைய தமிழ்ப்பெயர் அலைவாய் என்பது - இடைச்சங்கத்தை நிறுவினான். மீண்டும் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் இடைச்சங்கம் இருந்த நிலப்பரப்பும் அழிந்தது. ஆனால் இந்த அழிவு முன்போன்று அவ்வளவு பெரிதன்று.