உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை

35

குறிக்கும். இவ்வாறன்றி அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குமே இங்குக் குறிப்பிட்ட நான்மறையாகும் என்பது புலவர்களுடைய கற்பனையே. இது பொருந்தப் பொய்த்தலாகும். அக்காலத்தில் ஆரியர்கள் வடமொழியிற் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்ததோடு, தமிழிலும் முதிர்ந்த புலமை பெற்றிருந்தனர். இதனால்தான் தொல்காப்பியம் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. இந்த அதங்கோடு தற்காலத்து மலையாள நாட்டிலுள்ள திருவாங்கூர் என்னும் ஊரேயாகும். அதங்கோடு என்னும் பெயருக்கு முன் “திரு” சேர்ந்து திருவதங்கோடு ஆகி, பின்னர் அது திருவிதாங்கோடு என மாறி, நாளடைவில் திருவிதாங்கூர் எனத் திரிந்து, இறுதியாக ஆங்கிலர் ஆட்சியில் திருவாங்கூர் ஆயிற்று.

ரியர் இங்கு வந்து, பல தலைமுறைகள் ஆன பின்பே, தொல் காப்பியம் இயற்றப்பட்டது. அதனால்தான் அவர்கள் தமிழிற் சிறந்த புலமை பெற்று விளங்கினர். இதில் வியப்பு ஏதும் இல்லை. இத்தாலி நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த வீரமாமுனிவர் ஒரே தலைமுறையில் தமிழைத் திறம்படக் கற்று, முதலில் உரைநடை நூல்கள் இயற்றத் தொடங்கிப் பின்னர் கம்பர், புகழேந்தி போலத் தேம்பாவணியென்னும் பாவியத்தை இயற்றி, இறுதியாக “ஐந்திலக்கணத் தொன்னூல்” என்னும் இலக்கண நூலையும் யாத்தார் என்றால், ஆரியர்கள் பல தலைமுறைகளில் தமிழை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்தனர் என்பதில் சிறிதும் ஐயங்கொள்ள இடமேயில்லை.

நிற்க, தொல்காப்பியம் என்பது முழுமுதல் இலக்கண நூல் அன்று. அதற்கு முந்திய இலக்கண நூல்களிற் சொல்லப்பட்ட கருத்துகளையும், உலக வழக்கிலிருந்து மொழி மரபுகளையும் சேர்த்துச் செய்யப்பட்ட தொகுப்புநூலே தொல்காப்பியம். "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோனே” என வரும் தொல்காப்பியப் பாயிரத்தால் இதை உணரலாம். தமிழ் படித்தவர் அனைவரும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலை அறிவர். இந்த நன்னூலின் பொருளைத் தொகுத்துப் புலவர் குழந்தை என்பவர் 'நன்னூற் சுருக்கம்' என்றொரு நூல் இயற்றியுள்ளார். இதுபோன்றதுதுான் தொல் காப்பியம். இந்த நூலில் ஆசிரியரின் சொந்தச்சரக்கு, ஆரியத் தொடர் புடைய கருத்துகளைச் சேர்த்ததுதான். இதைத் தொல்காப்பியர் இயற்றிய காலம் கி. மு. 700. "வடவேங்கடம் தென்குமரி” யாயிடை செந்தமிழ் வழங்கிய காலம் அது. அந்தக் காலத்தில் செய்யுளுக்கு உரிய சொற்கள் எவையென்று கூறவந்த தொல்காப்பியர்,

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்(று) அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்கிறார். அஃதாவது இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்னும் மூவகைத் தமிழ்ச் சொற்களுடன் வடசொற்களையும் சேர்த்துக் கூறுகின்றார்.