உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

பாவாணர் உரைகள்

ஆரியத்துக்கு மூலமொழி தமிழ்தான்; இப்படி நான் சொல்வது வியப்பாக இருக்கலாம்; ஆனால் உண்மை. தமிழுக்கும் மற்ற திரவிடமொழிகளுக்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு போன்றதாயின், தமிழுக்கும் ஆரியத்துக்கும் உள்ள தொடர்பு பாட்டனுக்கும் பேரனுக்கும் உள்ள உறவுமுறையை யொத்ததாகும்.

இந்த உண்மை பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குப் புலப்பட்டது. அதுமுதல் மேனாட்டறிஞர் பலர் எழுதிய வரலாற்று நூல்களை ஊன்றிக் கற்கலானேன். பலநாட்டு மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களைப் பயின்றேன். டார்வின் என்ற அறிவியல் வல்லுநரின் கூர்தல் கொள்கையை (Evolution theory) விளக்கும் நூல்களைப் படித்தேன். இதன்பின், எல்லாவகையாலும் என் கருத்து உறுதிப்படுவதை உணர்ந்தேன்.

இந்த ஆராய்ச்சியால் முதல் மாந்தனின் பிறந்தகம் குமரிநாடே என்பது தெளிவாயிற்று. இந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் ஏனைய மக்க ளுக்குப் பல்லாவிரம் ஆண்டுகள் முற்பட்டவர் என்பதும் விளங்குவ தாயிற்று. ஆனால், முதலிரண்டு கழக நூல்கள் அழிக்கப்பட்டதால், இத்தகைய பழம்பெருநாட்டில் இயற்றப்பட்ட நூல் எதுவும் இப்போது கிடைக்கவில்லை.

இன்றுள்ள தமிழ் நூல்களுள் பழமையான தொல்காப்பியம். இடைக் கழகத்திற்குப் பிந்தியது; ஆனால் கடைக்கழகத்திற்கு முந்தியது. தொல் காப்பியர் காலத்தில் கடைக்கழகம் அமையவில்லை. கடல் கோளுக்குத் தப்பிய பாண்டியன் அதுகாலை மணலூரில் தங்கியிருந்தான். அப்போது தான் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனன் தெற்குநோக்கி வந்தான். அவன் வந்த சமயத்தில் பாண்டியன் சிக்காதாபுரியில் தங்கியிருந்ததாக வடமொழிப் பாரதம் குறிப்பிடுகின்றது. சிக்காதா என்னும் சொல்லுக்கு மணல் என்பது பொருள். எனவே பாண்டியன் மணலூரில் தங்கியிருந்தான் என்பதே பொருந்தும். ஆனால் என்ன காரணத்தினாலோ திருவிளையாடற் புராணம் மணவூர் என்று இதைக்குறிப்பிடுகின்றது. கழகம் இல்லாததால்தான் நிலந்திரு திருவிற் பாண்டியன் அவையத்துத் தொல்காப்பியம் அரங் கேற்றப்பட்டது. தொல்காப்பியப் பாயிரத்தில் "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற பெயரால் தொல்காப்பியர் குறிக்கப்படுகிறார். இத்தொடரில் “ஐந்திரம்” என்று சொல்லப்பட்ட நூல் வடமொழி இலக்கணமே. ஆனால் அது தமிழ் இலக்கணத்தைத் தழுவியது. அதனால் தான் அதை ஆரியர்கள் தமது திறமையால் ஒழித்துவிட்டார்கள். ஐந்திரம் பாணினியத்துக்கு முற்பட்டது. பாணினி தமது புலமையால் அதனை வழக்கிழக்குமாறு செய்துவிட்டார். மேலும், “நான் மறைமுற்றிய அதங் கோட்டாசான்” எனும் தொடரில், “நான்மறை” என்றது அந்தக் காலத்தில் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையே