உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை

33

சோமசுந்தர பாரதியாரும், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் என் கருத்தை மறுத்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் என்னை மறுத்தவர்கள் 'வடமொழி வேறு; தமிழ் வேறு; தமிழின் தொன்மை கி. மு. 2000க்கு ‘அணியமே' என்ற கொள்கை உடைவர்கள். அவர்கள் என் முடிபை ஒத்துக்கொள்ளாமற் போனதில் வியப்பில்லை.

அவர்கள் அவ்வாறு மறுத்ததற்குக் காரணம் உண்டு. தமிழில் இன்றுள்ள மிகத் தொன்மையான முழு இலக்கணநூல் தொல்காப்பியம் ஒன்றே. இதையும் ஓர் ஆரியர் இயற்றினார் என்று சொல்லிவிட்டால் தமிழின் பெருமை குலைந்துவிடுமே என அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் என்னைப் பொறுத்த அளவில், உண்மையை ஆராய்ந்து காணும் எனது நோக்கத்திற்கு இத்தகைய எதுவும் தடையாக நிற்கவில்லை. உண்மையில் கிறித்தவன் ஒருவன் குமரிநாட்டின் பழமையை ஒத்துக் கொள்ளமாட்டான். அப்படி ஒத்துக்கொண்டால் அவனைக் கிறித்தவன் என்று மற்ற கிறித்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றாலும் எனது பரந்த மனப்பான்மைக்கு முன்னால், இப்படிப்பட்ட சமய

குறுக்கிடவில்லை.

உணர்ச்சி

தொல்காப்பியர் ஆரியர் என்று கூறியதுபற்றி சோமசுந்தர பாரதியார் உட்பட வருத்தப்பட்டதைக் குறித்து நான் பொருட்படுத்தவில்லை யென்றாலும், தமிழ்க்கடலாகிய மறைமலையடிகளார் அது குறித்து வருந்தியது உண்மை யிலேயே எனக்கு வருத்தம் விளைத்தது. சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நான் ஓராண்டு தலைமைத் தமிழாசிரியனாகப் பணியாற்றிய பொழுது, எனது முயற்சியால் தொடங்கப் பட்ட தனித்தமிழ் இயக்கக் கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்குமாறு மறைமலையடிகளாரை அழைத்தேன். ஆனால் அடிகளார் வர மறுத்து விட்டார்கள். இதற்கு அவர்கள் காட்டிய கரணியங்களில் ஒன்று, நான் தொல்காப்பியரை ஆரியர் என்று காட்டியதாகும். இதையறிந்த நான், பின்னர் ஒருமுறை அவரை நேரிற்கண்டு, குமரிநாட்டின் பழமையையும், ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலத்தையும், அவர்கள் தமிழ் கற்ற நோக்கத்தையும், தொல் காப்பியத்திற் காணப்படும் ஆரியத் தொடர்பான கருத்துகளையும் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னபிறகு ஒருவாறு என் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், தொல்காப்பியர் ஆரியர் என்று கொள்வதால், தமிழின் பெருமை எந்த வகையிலும் குறைந்துவிடாது என்பதற்காகத்தான். தமிழ் மிகவும் பழமையான மொழி. பழமையென்றால், இன்று உலகத்தில் வழங்குகின்ற எல்லா மொழிகளையும் விடத் தொன்மை யானது என்று சொல்லத்தக்க வகையில் மிக மிகப் பழமையான மொழி.