உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை

37

இவையெல்லாம் கண்கட்டு வேலைகள் போலல்லவா இருக்கின்றன! ஏதோ மணல் கடலையாவதும், தோல் நரியாவதும் போல மாயமாக இருக்கின்றனவே! இதற்குப் பொருத்தமான மற்றோர் எடுத்துக்காட்டு கூறலாம் என்றால், கேரளம் என்னும் சொல் 'நாரிகேௗ' என்னும் சொல்லிலிருந்து வந்தது என வடமொழியாளர் கூறுவதை சொல்லலாம். 'நாரிகேௗ' என்னும் சொல் தென்னைமரத்தைக்குறிப்பது மலையாளத்தில். தென்னைமரங்கள் மிகுதியாக இருப்பதால் கேரளம் என்று பெயர் வந்ததாம்! எப்படி யிருக்கிறது ஆராய்ச்சி! இதுதான் போகட்டுமென்றால், மற்றுமொரு சொல் ஆராய்ச்சி நமக்கு நகைப்பை விளைவிக்கிறது. அதுதான் ‘நரயவஹ’ (மனிதனைப் போன்றவன்) என்னும் சொல்லிலிருந்து 'வானரம்' என்பது பிறந்ததென்னும் வடமொழியாளர் கூற்று, 'நரயவஹ' என்பது யவநரஹ' என மாறிப் பிறகு வானரம் எனத் திரிந்தாம்! ஏனிப்படிச் சுற்றி வளைத்து மூக்கைத்தொட முயல்கிறார்கள்? வால்+நரம்=வானரம் (வாலுள்ள மனிதன்) என எளிதாகச் சொல்லிவிட்டுப் போகலாமே!

இஃதிப்படியிருக்க, தொல்காப்பியத்தில் வரும் ஒன்பது+பத்து; தொண்ணூறு, ஒன்பது+நூறு: தொள்ளாயிரம் என்பன குறித்த நூற்பாக்கள் பிற்காலத்தன என்றும், இடைச்செருகலாய் வந்தவை எனவும் இக்காலத்துப் புலவர்கள் சிலர் கூறுகின்றனர். அப்படியானால், பிற்காலத்தில் கி. பி. 12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தியார் ஏன் இந்த விதிகளையே திரும்பக் கூறுகின்றார். மாற்றிச் சொல்லியிருக்கலாமே! அவரும் ஒரு பிராமணர். அதனால் தொல்காப்பியர் கருத்தையே பின்பற்றி நூற்பா இயற்றிவிட்டார்.

தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்துப் பார்த்தால், பாயிரம் முதல் இறுதிவரை தொல்காப்பியர் ஆரியமரபுதழுவியவர் தமிழில்உரிச்சொல் என்பது செய்யுளுக்கே உரிய, எளிதிற் பொருள் விளங்காத சொல்லைக் குறிக்கும். ஆனால், தொல்காப்பியர் எளிய சொற்களைக்கூட, உரிச்சொற்கள் என்கிறார். “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்” என்று சொல்கிறார். தீர்தல் என்பது என்ன, அவ்வளவு கடினமான சொல்லா? தீர்ந்தது என்றால், விட்டுச்சென்றது முடிந்தது என்பது எல்லாருக்கும் தெரியுமே! “அட, அது தீர்ந்துபோயிற்று அப்பா!' என்று, படியாதவன்கூடச் சொல்கிறானே! இதுபோலவே "பழுது பயம் இன்றே” என்று ஒரு மற்றொரு நூற்பாவில் கூறுகிறார். பழுதுபட்டதென்றால், பயனற்றுப் போனது என்பதுதானே பொருள். எல்லாரும் விளங்கிக்கொள்ளக் கூடிய சொல்தானே இது! இது மிகக்கடினமான சொல்போலவும், செய்யுளில் மட்டுமே பயின்று வரக்கூடியது போலவும், உரிச்சொல் வரிசையில் இதைச் சேர்த்துவிட்டாரே!