உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

பாவாணர் உரைகள்

மற்றும் மரபியலில்,

'நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

என்று சொல்கிறார். இங்கு அந்தணர் என்று குறிக்கப்பட்டவர்கள் ஆரியப் பார்ப்பனரே. அவர்காலத்தில் ஆரியர்கள் தமிழகத்தில் வேரூன்றி விட்டனர். அதுமட்டும் அன்று; 'அந்தணர்' என்ற சொல்லும் அவர்களுக்கே உரியதாக நிலைபெற்றுவிட்டது. எனவே, தொல்காப்பிய மரபியல் சொன்மரபுமட்டும் கூற எழுந்ததன்று; தொழில் மரபும் உடன்கூறவே தோன்றியதாகும் என்று நாம் உய்த்துணரலாம். இந்த நுட்பத்தை அறியாத தமிழ்ப் புலவர்கள் சிலர், "தொல்காப்பியர் மரபியலில் தொழிலைப் பற்றிச் சொல்லியிருப்பாரா? சொல்லமாட்டார்; ஆகவே இத்தகைய நூற்பாக்கள் இடைச் செருகலாகப் பிற்காலத்தாரால் சேர்க்கப்பட்டவை” என்று கூறுகிறார்கள். இது தவறு. தொல்காப்பியர் காலத்தில் நான்கு குலப்(வருணப்) பாகுபாடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பதையே இந்நூற்பா புலப்படுத்துகிறது. இது பற்றித் “தொல்காப்பிய விளக்கம்” என்னும் எனது நூலில் தெளிவு படுத்துவேன்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதை நாம் அறிவோம். ஒரு மொழியில் எது முதலில் தோன்றும், இலக்கணமா? இலக்கியமா? இலக்கியந்தான் முதலில் தோன்றும். பல இலக்கியங்கள் தோன்றிய பிறகே இலக்கணநூல் உண்டாகும். இலக்கியங்களில் எத்தகையவை முதலில் உண்டாகியிருத்தல் கூடும்? அகம், புறம் என்னும் இருவகைப் பொருள் பற்றியனவே முதலில் தோன்றியிருக்கும். எனவேதான் பொருளிலக்கணம் எழுத்து, சொல்லிலக்கணங்களைவிடக் காலத்தால் முற்பட்டது என்று நான் கருதுகிறேன். தமிழுக்கே தனிச் சிறப்பு தருவது இந்தப் பொருளிலக்கணந் தான். அப்படியிருந்தும், தமிழ் கற்ற பிராமணர்கள் “அஃது ஒன்றுமில்லை ஐயா, வெறும் Poetics - பாட்டியல்; அவ்வளவுதான்!" என்கிறார்கள். காமில் சோலவில் என்ற செக்கோசுலோவாக்கியக் கோமாளி ஒருவர் பிராமணத் தமிழறிஞர்கள் எழுதிய நூல்களைப் படித்துவிட்டு, இப்படிப்போல எதையாவது உளறிக்கொண்டிருக்கிறார்கள்! தமிழின் சிறப்பை அறிய அவர் படித்த நூல்கள், நற்றிணை என்னும் கழக இலக்கியமும், சுப்பிரமணியன் என்பவர் எழுதிய 'நாலுவேலி நிலம்' என்னும் நாடகமும் ஆகிய இவ்விரண்டுமே!

தென்மொழி