உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழனின் பிறந்தகம்

113

இந் நெறிமுறையைக் கடைப்பிடித்துத் தமிழக வரலாறு வரைந்தவர் பி.டி. சீநிவாசையங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் என்னும் இருவரே. ஒரு நாட்டு வரலாறு வரைதற்குப் பயன்படும் மூலவாய்கள் (Sources) பின்வருமாறு ஐவகைப்படும்:

1. மரபு வழக்கு (Tradition)

2. அயல் நாட்டார் குறிப்பு

3. தொல்பொருட் சான்று (Archaeological evidence)

4. நாட்டிலக்கியம்

5. நாட்டுமொழி.

பழம் பாண்டிநாடான பண்டைத் தமிழகம் கடலுள் முழுகிப் போனதனாலும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட அனைத்திலக்கியமும் அழிக்கப்பட்டுவிட்டதனாலும் தொல்பொருட் சான்றும் பண்டை இலக்கிய மும் தமிழக வரலாற்றிற்குப் பயன்படாவாறு அடியோடு இறந்துபட்டன. அதனால், இன்று வரலாற்றுச் சான்றாக உதவுவது பெரும்பாலும் மொழியே. இற்றை இலக்கியச் சான்றுகள்

தமிழ் தோன்றியது தென்மாவாரியில் முழுகிப்போன குமரிநாடே. ஆதலால், தமிழன் தோன்றியதும் அந் நாடே. குமரிக்கண்டத் தென் கோடியில், பனிமலைத் தொடர்போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியென்னும் கங்கை போலும் பேரியாறும் இருந்தன. அப் பழம் பாண்டிநாட்டை யாண்ட பாண்டி வேந்தருள் ஒருவன் நெடியோன் என்பான்.

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே."

(புறம். 9: 10-11)

அவன் காலத்திலோ, பின்போ, ஒரு பெருங் கடல்கோள் நிகழ்ந்து, குமரிமலையும் பஃறுளியாறும் அதன் கரையிற் கட்டப்பட்ட பாண்டியன் தலைநகராகிய (தென்) மதுரையும் உள்ளிட்ட பழம் பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதியை முழுக்கிவிட்டது. அதுவே தமிழிலக்கியங் கூறும் முதல் கடல்கோள். கடல்கோளுக்குத் தப்பிய அல்லது பிற்பட்ட பாண்டியன் ஒருவன், வடதிசையிலுள்ள பனிமலையையும் கங்கையாற்றையுங் கைப்பற்றி, தான் இழந்த குமரிமலைக்கும் பஃறுளியாற்றிற்கும் ஈடு செய்துகொண்டான். இதையே,

அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"

என்று பாடினார் இளங்கோவடிகள்.

(சிலப். 11 : 17-22)