உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

தமிழின் தொன்மையும் முன்மையும்

இவ் வுலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம். அவற்றுள், தமிழே தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் வாய்ந்ததென்பது, உண்மையான ஆராய்ச்சியாளரெல்லாராலும் அடிக்கடி சொல்லவும் எழுதவும்பட்டு வருகின்றது.

சென்ற நூற்றாண்டில் முதல் முதலாகத் தமிழையும், திரவிட மொழிகளையும் தமிழ்நாட்டிலிருந்து நிலையாக ஆராய்ந்து, தாம் கண்ட அல்லது தமக்குத் தோன்றிய முடிவுகளை உலகிற்கெடுத்துக் கூறிய பெரியார் கால்டுவெல் மேற்காணியார். அவர் காலத்தில், கடைக்கழக இலக்கியமும் தொல்காப்பியமும் தமிழ்ப் புலவர்க்கே தெரியாதவாறு மறைந்து கிடந்தன; மறைமலையடிகள் போன்ற தனித்தமிழ்ப் புலவர் இல்லை; தலைக்கழகக் குமரிநாட்டைப் பற்றி ஒருவர்க்கும் ஒன்றுந் தெரியாது; கா.சு.போன்ற ஆராய்ச்சியாளருமில்லை; நயன்மைக் கட்சி தோன்றாமையால் இன வுணர்ச்சியும் ஒருவர் உள்ளத்திலும் எழவில்லை; எல்லாத் துறையிலும் தமிழர் தம்மைப் பிராமணர்க்குத் தாழ்ந்தவராக வெளிப்படையாகக் காட்டிக் கொண்டனர். தமிழர் வெளிநாட்டினின்று வந்தவரென்று தாம் நம்பியத னாலும், எல்லாத் துறையிலும் பிராமணர் மேம்பட்டிருந்ததனாலும், இந்திய நாகரிகத்தைக் காட்டும் இலக்கியம் இன்று சமற்கிருதத்திலேயே உண்மை யாலும் தமிழர் வடசொற்களை விரும்பிக் கலந்து தமிழைக் கலவை மொழியாகவே வழங்கியதனாலும், தமிழ நாகரிகத்தின் உயர்ந்த கூறு ஆரியர் கண்டதென்று கால்டுவெலார் தவறாகக் கூற நேர்ந்துவிட்டது. ஆயினும், தமிழ் ஆரியத்திற்கு முந்தினதென்னும் உண்மைமட்டும், அவர் கண்ணிற்குத் தப்பமுடியாது விளங்கித் தோன்றிவிட்டது. ஆனாலும், தமிழ் மாபெருஞ்சொல் வளத்ததென்றும், தமிழ் வடமொழித் துணை யின்றித் தனித்து வழங்கக்கூடியதென்றும் கண்டறிந்தார். இவ் வீருண்மை களையும் பற்றி அவர் கூறியிருப்பன வருமாறு:

“திரவிட மொழிக் குடும்பத்தை, இந்தோ ஐரோப்பியத் தொகுதியை யும் சித்தியத் தொகுதியையும் இணைக்கும் அண்டாக (வளையமாக) மட்டுமன்றி சில கூறுகளில், சிறப்பாக மூவிடச் சுட்டுப் பெயர்கள் தொடர்பாக, மாந்தன் மொழி வரலாற்றில், இந்தோ ஐரோப்பிய நிலைக்கு முந்தியதும்,