உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

தமிழ் வேறு, திரவிடம் வேறு

தமிழும் திரவிட மொழிகளும் ஓரினமாயினும் மிக வேறுபட்டவை என்பதைப் பலர் அறிந்திலர்.

செந்தமிழும் கொடுந்தமிழும்

குமரிக்கண்டத்தில் தோன்றி வளர்ந்து பல்லூழிகளாகப் பண்படுத்தப் பட்ட தமிழ், முதற்காலத்து எவ்வகை அடைமொழியும் பெறாது தமிழ் என்றே வழங்கியிருப்பினும், இடைக் காலத்துப் புலவராலும் அரசராலும் போற்றப் பெறாத நாடுகளில் பல்வகையில் திரிந்து கொடுந்தமிழ் எனப் பெயர் பெற்றபின், ஒப்பு நோக்கிய முறையில், செந்தமிழ் என இனச் சுட்டுப் பண்புகொள் பெயர்க்கொடை பெற்றது.

செந்தமிழ்ச் சொற்கள், சொல்லியல் (Etymology) முறைபற்றி (1). இயற்சொல், (2) திரிசொல் என இரு பாலாகப் பகுக்கப் பெற்றன. இயற் சொல்லாவது இயல்பான முந்துநிலைச் சொல் (Primitive); திரிசொல்லாவது, அதனின்று திரிக்கப்பட்ட சொல் (Derivative). வெள் என்பது ஓர் இயற் சொல். வெள்ளம், வெள்ளந்தி, வெள்ளி, வெள்ளில், வெள்ளை, வெளி, வெளில், வெளிறு,வெளு, வெள்கு (வெட்கு), வெட்டை, வெறு முதலியன அதனின்று திரிக்கப்பட்ட திரிசொற்கள் இவ்வாறு, சொற்கள் மென்மேலும் பன்மடியாகத் திரியுமாதலால், இன்னது இயற்சொல்லென்றும் இன்னது திரிசொல் லென்றும் வரையறுத்துக் கூற இயலாதெனவும், ஒரே சொல் தன் பகுதியை நோக்கத் திரிசொல்லும் தன் திரிபை நோக்க இயற்சொல்லுமாகு மெனவும் அறிந்துகொள்க. எடுத்துக்காட்டாக மணல் என்னும் சொல் மண் என்பதை நோக்கத் திரிசொல்லும், மணலி என்பதை நோக்க இயற்சொல் லும், ஆதல் காண்க. இவ் விளக்கம் தொல்காப்பியர் காலத்திலேயே மறைந்து போனதாகத் தெரிகின்றது.

கொடுந்தமிழ்ச் சொல்லியல்பு பல்வகைப்பட்டதேனும், சொற்றிரிபு பொருட்டிரிபு, செய்யுட் சொல் வழக்கு, புதுச் சொல்லாக்கம் என நால் வகையுள் அடக்கப்பெறும்.