உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசைத் தமிழ்

79

தமிழ்ப்பெயரை நீக்கி ஆரியப்பெயரை இட்டுத் தமிழ்நாட்டிலும் வழங்கச் செய்தனர். ராகம் என்பது அராகம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு.

ஒ.நோ: அரங்கன்-ரங்கன்.

சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே. இந்துத்தானி இசை இசைத்தமிழின் திரிபே. அக்பர் அவைக்களத்தில் தென்னாட்டு இசைத்தமிழ்வாணரும் இருந்தனர். இந்துத்தானி இசையிலும் சுரம் தாளம் அராகம் என்பவற்றிற்குத் தென்னாட்டிசையில் இன்று வழங்கும் பெயர்களே வழங்கிவருகின்றன. கருநாடக இசை இசைத்தமிழே. புரந்தரதாஸ் என்பவர் கன்னடத்தில் சில கீர்த்தனைகள் இயற்றினார். மகமதியர் தென்னாட்டிற்கு வந்தபோது திரவிட நாட்டில் தமிழரசர் வலிகுன்றிக் கருநட மன்னர் தலைமையாயிருந்ததால், திரவிட நாட்டைக் கருநாடகம் (கர்நாட்டக்) என்றும் திரவிட இசையாகிய தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் அழைத்தனர். கருநாடகம் என்னும் சொல்லும் கருநடம் (கன்னடம்) என்னும் மொழியும் தமிழின் திரிபே. ஆகவே, இசைத்தமிழே உருமாறியும் குறியீடு மாறியும் இந்துத்தான் கருநாடக இசைகளென வழங்கி வருகின்றது. சிலபல புதுமெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதினால், அவை வேறிசையாகா. இடைக்காலத்தில் தமிழர் ஊக்கப்பட்டிருப்பின் அவரும் புதுமெட்டுகள் கண்டுபிடித்திருப்பர். ஐயருக்கு முந்தின மெட்டுகளெல்லாம் தமிழ் மெட்டுகளே. இந்துத்தானிசை கருநாடக இசை தெலுங்கிசை என்பவை யெல்லாம் மொழியால் வேறுபட்டவையே யன்றி இசையால் வேறுபட்டவை யல்ல. அவற்றை அவ்வம் மொழிப்பெயரால் இன்னின்ன பாட்டென்று சொல்லுதலேயன்றி இசையென்று அழைத்தல் தகாது. இசைத்தமிழ்க் கலையே மொழி வேறுபாட்டால் வெவ்வேறு பெயர் பெற்று வழங்கி வருகின்றதென்க. இசை வேறு; பாட்டு மொழி வேறு. மலையாளத்தில் சில பாட்டுகளிருப்பதால் மலையாள இசை என ஒன்று ஏற்படாது. ஆகவே, இதுபோது தமிழ்நாட்டிலுள்ள இசை, கலையால் தமிழும் மொழியால் பிறிதும் ஆகும் என்றறிந்து தீட்டிய மரத்திற் கூர்பாராமலும் கொல்லத் தெருவில் ஊசி விற்காமலும் இசைத்தமிழை ஆர்வத்துடன் தழுவுக. தமிழ் வாழ்க! இசைத்தமிழ் வாழ்க! வளவர்கோமான் செட்டி நாட்டரசர் சர் அண்ணாமலை வள்ளலார் நீடூழி வாழ்க!

"பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.

""

(குறள். 573)

"செந்தமிழ்ச் செல்வி" நளி 1943