188
தமிழ் வரலாறு
இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தாய்மொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர்.
தந்தையும் அரசும்
ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.
கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம்பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்.
அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது.
தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால். தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே.
2ஆம்
நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மையரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Soveriegnity) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?..... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம்.
எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும்.