உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் பொன்மொழிகள்

189

ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை.

தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை.

ஐந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டுபிடிக்கும்வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமே யாகும்.

தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவருமே.

எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழிபோ லாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய பெரும்புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது மிகையன்று.

பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே.

இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்விவிட்டது.

அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப்படுத்தியவன் ஆங்கிலேயனே.

இந்தியால் தமிழ் கெடும் என்றறிந்தே 'இந்தி பொதுமொழியா?' என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை.

பொருளாட்சித் துறையில் எத்துணை முன்னேற்ற மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே.

தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை, அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும்.