உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

45

ஆர் விகுதி பெரும்பாலும் உயர்வுப் பன்மையாக ஒருமைக்கு வழங்கி வருதலின், அது பன்மை குறிக்கத் தவறும்போது விகுதிமேல் விகுதி வேண்டப்படும்.

உ-ம்: சபையார் வந்தார்கள்.

அன் சாரியை பெற்ற அர்விகுதியாயின் விகுதிமேல் விகுதி வேண்டிய தின்று.

உ-ம்: சபையார் வந்தனர்.

கடவுளை ஆண்பாலிலும் உயர்வுப் பன்மையிலும் ஒன்றன் பாலிலும் கூறலாம்.

உ-ம்: கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது.

குழந்தை என்னும் பெயரை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், என்னும் மூன்றுபாலிற் கூறலாம்.

உ-ம்: குழந்தை வருகிறான் (ஆண்), வருகிறாள் (பெண்), வருகிறது (இருபாற்பொது). மகவு, சேய், குழவி, பிள்ளை என்ற பிற இளமைப் பெயர்களும் இங்ஙனமே.

ஆள் என்னும் பெயர் ஒருமையில் பாலறியப்படாவிடத்து ஒன்றன்பால் வினைகொண்டும், பாலறியப்பட்டவிடத்து ஆண்பால் அல்லது பெண்பால் அல்லது உயர்வுப் பன்மை வினைகொண்டும், பன்மையில் எப்போதும் பலர்பால் வினைகொண்டும் முடியும்.

அம்மாள் வருகிறது என்பது தவறு. அம்மாள் வருகிறாள் என்று பெண்பாலிலாவது, அம்மாள் வருகிறார்கள் என்று உயர்வுப் பன்மையிலாவது கூறல்வேண்டும்.

து என்னும் ஒன்றன்பால் விகுதியும், அ, வை என்னும் பலவின்பால் விகுதிகளும் பெறாத அஃறிணைப் பெயர்களெல்லாம் ஒருமை பன்மை என்னும் இருமைக்கும் பொதுவாகும். அவற்றை ஒருமையாகவும் பன்மையாகவும் ஆளலாம். அவற்றின் எண்ணை அவற்றின் பயனிலைகளே காட்டும். இத்தகைய பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர் எனப்படும்.

உ-ம்: மரம் வளர்கின்றது, வளர்கின்றன.

அறிவின்மை, மூப்பு, உறுப்பறை (அங்கவீனம்) முதலிய காரணம்பற்றி, மக்கள் இழிவாய்ப் பண்புப் பெயராற் கூறப்படும்போது, அப் பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர்போற் பாவிக்கப்படும்.

உ-ம்: கிழம் போகிறது, போகின்றன.

சிலவிடத்து உயர்திணைப் பெயர்கள், வடிவில் ஒருமையாயிருப்பினும் பொருளிற் பன்மையாகும். அவை சாதியேக வசனமென்று வடமொழியிலும், வகுப்பொருமை யென்று தென்மொழியிலுங் கூறப்படும்.

உ-ம்: பெற்ற தாயைப் பேணாத மூடர்.