பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாவேந்தரின் பாட்டுத்திறன்

உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மேற்கல்விக்கும் வேறு ஆய்வுக்கும் இரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகட்குச் செல்லும் அறிஞர்கள் ஒர் ஆறு திங்களில் அந்நாட்டு மொழிகளில் ஒரளவு புலமை பெற்றுத் தம் பணியைச் சிறந்த முறையில் முடித்துத் திரும்புவதை இன்றும் காண்கின்றோம். மேலும் மேற்புல நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள், புதியவை புனைதல் போன்ற செயல்களில் வெற்றியடைந்தோர் யாவரும் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் அல்லர் என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். கருவிலே திருவும், துறை அறிவில் தோய்வும் ஆய்வு நோக்கும் உள்ளவர்கட்கே புதிய கண்டுபிடிப்புகளும் புதுப்புனைவு வகைகளும் கைவந்த கலையாக மிளிரும்.

வெள்ளையர் ஆட்சி நடைபெற்றபோது இருந்ததை விட இன்று மக்களிடையே ஆங்கிலமோகம் புதிய வேகம்பெற்றுள்ளது.நாடெங்கும் ஆங்கில மொழிமூலம் பயிற்சி தரும் சிறார்ப்பள்ளிகள்,நடுவண் அரசு அங்கீகாரம் பெற்று (மானியச்சலுகையின்றி) தொடங்கப் பெற்று நடைமுறையில் இருந்துவரும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் இவற்றின் எண்ணிக்கை பெருகி வருவதைக் காணலாம். இவற்றில் தாய்மொழி கற்பிக்கும் வாய்ப்பே இல்லை. இந்தி கட்டாயமாகக் கற்பிக்கும் வாய்ப்பு இருந்தது. இத்தகைய பள்ளிகட்கு அங்கீகாரம் கொடுத்துக்கொண்டே வந்தால் மாநில மொழிகட்கு முக்கியத்துவம் இல்லாது போகும்; இந்தி அனைத்திந்திய நிலையில் பொது மொழியாக ஆவதற்கு வழி வகுக்கும் என்று தந்திர எண்ணமும் வடவர்களிடம் இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்து அறியலாம். ஆனால், ஆங்கில வளர்ச்சியும் அதிகமாகித் தங்கள் எண்ணத்திற்குத் தடைக்கல்லாகும் நிலையும் ஏற்படும் என்பதை அவர்கள் சிந்தனையில் எழுந்ததோ என்பது தெரியவில்லை. இத்தகைய பள்ளிகளில் தமிழே இல்லாதிருந்தால் மாநில மட்டத்தில் அலுவல் பெறுவோருக்கு இது தடையாக இருக்கும் என்று கருதியே நீள் நோக்குடன் பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் போன்ற மொழிப்பற்றாளர்கள், நாட்டு நலம் கருதும் நல்லவர்கள் இவர்கள் முயற்சியால் தமிழ் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுநடைமுறையில் இருந்துவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.