பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 239 1964ஆம் ஆண்டு தமிழர் திருநாளை ஒட்டிய ஒரு போது திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அமைந்திருந்த என் விடுதிக்கருகே கவிஞர் வந்திருந்தார். அவரை ஒருமுறை என் விடுதிக்கு அழைக்க எண்ணினேன். அவருக்குப் புலால் உணவு விருப்பமானது என்பதை நான் அறிந்திருந்தேன். உணவகத்துக்கு நானே பொறுப்பு. 1964 பிப்ரவரி மாத விருந்தில் வான்கோழிப்புலவு வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. கவிஞரிடம் எங்கள் விருந்துக்கு வருமாறு வேண்டிக் கொண்டேன். வருவதாக உடனே ஒத்துக் கொண்டார். என் அழைப்பைப் பற்றி மகிழ்ச்சியும் அடைந்தார்! என்ன சிறப்புணவு' என்று கேட்டார். 'வான்கோழிப்புலவு என்றேன். அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. விருந்து நடைபெற்ற அன்று கவிஞரை அழைக்கத் தியாகராயநகர் சென்றேன். அவர் காத்திருந்தார். வீட்டிலிருந்து குறுக்குத் தெருவைக் கடந்து பெருந்தெருவிற்கு நாங்கள் வந்தோம். தியாகராய நகரிலிருந்து மரீனாக் கடற்கரையில் உள்ள எங்கள் விடுதிக்கு வாடகை வண்டியில் (Taxi) கவிஞரை அழைத்து வரத் திட்டமிட் டிருந்தேன். இடையில் ரிக்ஷாக்காரன் ஒருவன் தலையிட்டான்; வற்புறுத்தினான். எனக்குச் சினம் ஏதுமில்லை. கவிஞருக்குச் சினம் பொங்கிவந்துவிட்டது. ரிக்ஷாக்காரனை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு சென்றுவிட்டார். எளிதிலே சிறுபொருளுக்கும் அவர் சீற்றம் கொண்டார் என்பது இதனால் தெரியவந்தது. விடுதியில் கவிஞர் அருகே அமர்ந்து அவருக்கு வேண்டியதைப் பரிவுடன் வழங்கிக் கொண்டிருந்தேன். வான்கோழிப் புலவு நன்றாக இருந்தது என்று அவர் பாராட்டினார். ஆனால் குழந்தையைப் போல மிக மிகச் சிறிதே உண்டார். அது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அந்த வயதில் சிறிதளவே உண்ணுதல் அவருக்கு வழக்கம் போலும். உணவை முடித்துவிட்டு மாடியில் உள்ள என் அறைக்குச் சென்றோம். தாழ்வான ஒரு சாய்வு நாற்காலியில் அவரை அமர வைத்தேன். அப்போது எம்.லிட்., ஆய்வினை முடித்துவிட்டு பிஎச்.டி. பட்டத்திற்கு ஆய்வு நடத்தி வந்தேன். என் ஆராய்ச்சியில் அவர் அவ்வளவு அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. பொதுவாகவே அக்காலத்தில் உயர்கல்விக் கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆராய்ச்சி பற்றி அவர்கள் அறியவும் இல்லை; அக்கறையும் காட்டவில்லை. பாவேந்தரிடம் அவர் பாப்புனையும் ஆற்றல் பற்றிக் கேட்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆவல். அவர், அண்மையில் குயில் இதழில் (30.12.58) எழுதிய ஒரு அழகுச்சிறுபாடல் பற்றிக் கேட்டேன். அந்தப் பாடல் இதுதான்: