பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாரதியாரும்பாவேந்தரும் இந்தப் பாட்டில் ஈடுபட்டு நான் பாடிக்கொண்டிருந்தபோது பாரதியார் மாடிப்படியேறி வந்தது எங்களுக்குத் தெரியாது. வந்தவர் லாவணி முடியும் வரையில் மாடிப்படியிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டு முடிந்ததும் சபாஷ் என்று கூறிக் கொண்டு மேலே வந்தார். என்னை முதுகிலே தட்டிக் கொடுத்து, "சுப்புரத்தனம் உன்பாட்டிலே நிறைய விஷயம் இருக்குது” என்று கூறிப் பாராட்டினார். வெட்கம் கலந்த நாணத்தோடு நான் சிரித்தேன். பாரதியாரைப் பற்றிப் பாவேந்தர் வாயிலிருந்து நான் அறிந்து கொண்ட செய்தி இவ்வளவுதான். ஆனால் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எப்படியாவது விரைவில் எழுதிமுடித்துவிட வேண்டுமென்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். பாவேந்தர் இறந்தவுடன் அடுத்த வாரம் வெளியான ஆனந்த விகடனில் அவர் பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியது. பாவேந்தரின் படத்தோடு அக்கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள்; புதுவையில் இருந்த பாரதியின் குடும்ப வாழ்க்கையை அதில் மிக அழகாக எழுதியிருந்தார். சென்னைத் தியாகராய நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்தபோது, ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.எஸ்.எஸ்.வாசனே ஒருமுறை நேரில் வந்து பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து விகடனில் எழுதும்படி கேட்டுக் கொண்டாராம். பாவேந்தரும் இசைந்து ஒரு கட்டுரை அனுப்பி வைத்தார், பிறகு என்ன நினைத்தாரோ தொடர்ந்து எழுத மறுத்து விட்டார். தொடர்ந்து எழுதியிருந்தால் பாரதி வரலாற்றின் நுட்பமான சில பகுதிகள் நமக்கு வெளிச்சமாயிருக்கும். பாரதி வரலாற்றை ஆயிரம் பேர் எழுதியிருக்கலாம். இன்னும் எழுதலாம். ஆனால் ஒரு கவிஞன் தான் மதித்துப் பழகிய மற்றொரு பெருங்கவிஞனைப் பற்றி எழுதும் எண்ண ஓட்டங்கள் மற்றவர் சிந்தனைக்கு எட்டாதவையாகவும், படிப்போர்க்கு வியப்பூட்டுபவையாகவும் இருக்கும். அத்தகைய வரலாற்றுக் காவியம் நமக்குக் கிட்டாமல் போனது பேரிழப்புத்தான். தாம் ஆனந்தவிகடனில் எழுத மறுத்துவிட்ட செய்தியைப் பாவேந்தரே ஒருமுறை என்னிடம் கூறினார். ஏன் மறுத்து விட்டீர்கள் என்று நான் கேட்டதற்கு முகத்தைச் சுளித்துக் கொண்டாரே தவிர மறுமொழி ஏதும் கூறவில்லை. இன்றுள்ள அரசியல் தலைவர்களும், கவிஞர்களும் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற விற்பனை மிகுந்த இதழ்களில் கடைசிப்பக்கம், ஒரு பக்கம் அரைப்பக்கம் எழுதக் கிடைத்தால் போதுமென்று ஏங்கும் நிலையைக் காண்கிறோம். ஆனால் வீடுதேடி வந்த விளம்பரத்தைப் பாவேந்தர் துச்சமாக மதித்தது வியப்பிற்குரியதன்றோ?