சாம்பல்
13
புலிகேசியைப் பிணமாக்கிய படைத்தலைவனின் ஆயுதச் சாலையிலே, காவல் புரியவேண்டும்! சாளுக்கியன் மனம் மிக மிக வேதனைப்பட்டதிலே ஆச்சரியமென்ன! தாய்நாட்டை அழித்த கருவிகள். நாள்தோறும் பார்க்க வேண்டும்; அவைகளை வரிசையாக, ஒழுங்குபடுத்த வேண்டும். பழுது பார்க்க வேண்டும்—இவை, சாளுக்கியனின் பணி! இதைவிட, நாள்தோறும், நானூறு சவுக்கடி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடலாம்! பிரதிதினமும் பாம்புப் புற்றிலே கரத்தைவிட்டுக் கடிபடவேண்டும் என்று தண்டனை தந்திருக்கலாம்.
ஒவ்வொரு நாளும், பரஞ்ஜோதியின் ஆயுதச் சாலையில் காவல் புரிவதைவிட, ஒவ்வொரு விநாடியும், அந்த வாளைக் காண்பதைவிட, அந்தத் தண்டனைகள் கொடுமையல்லவே என்றெண்ணினான் சாளுக்கியன்.
இவ்வளவு வேதனையில் தள்ளப்பட்ட, வில்லாளன்—அந்தச்சாளுக்கியனின் சிறப்புப்பெயர் அங்ஙனம் அமைந்திருந்தது—தன் தாய்நாட்டைப் பற்றி எண்ணத் தவறவில்லை. எண்ணினது மட்டுமல்ல, தன் ஆயுள் முடிவதற்குள், தாய் நாட்டுக்கு ஏற்பட்ட பழியையும் இழிவையும், தன் இரத்தத்தால் கழுவவேண்டும் என்று தீர்மானித்தான்.
அவன் அந்தப் பிடி சாம்பலை மட்டும் விடவில்லை, பேழையில் இருந்தது. சிறு பட்டுத் துண்டிலே முடியப்பட்டு! யாருமறியாவண்ணம், ஒவ்வோர் நாளும் நடுநிசியில் செல்வான்; பேழையைத் திறப்பான்; கண்களிலே கொப்பளிக்கும் நீரைத் துடைப்பான்; பட்டு முடிப்பை எடுப்பான்; பார்ப்பான்; பெருமூச்செறிவான்; ‘பிடி சாம்பல்! பிடி சாம்பல். முடிவிலொரு பிடி சாம்பல்! சாளுக்கியன் கரத்தில் சாளுக்கிய நாட்டின் அழிவைக் காட்டும் பிடி சாம்பல்!’ என்று தனக்குள் கூறிக் கொள்வான்; பட்டு முடிப்பைப் பேழையுள் வைப்பான்; பிறகு படுக்கையிற் சென்று புரள்வான்; கண்ணை மூடினால், களம் தெரியும்; திறந்தாலோ, விளக்கொளி தீப்பந்தமாகக் காணப்படும்; விடிய விடியத் துடித்தபடி இருப்-