உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பிடி

சான்றோர் மன்றமாக விளங்கிய காஞ்சிபுரம், இனிச் சாளுக்கியப் படைக்கு இரையாவதோ! இதற்கோ இத்துணை எழிலும் செல்வமும், கலையும் உயர்நிலையும் பெற்றோம், வளர்த்தோம் என்றெண்ணி ஏங்கினர்.

சாளுக்கிய மன்னன் புலிகேசி, மகேந்திரன் மருட்சி அடைந்தது கண்டு மகிழ்ந்து, அடியோடு பல்லவ நாட்டை அழித்தொழிப்பதைவிட, அங்கு தனக்குப் பணிந்த நிலையில் பல்லவ மன்னன் இருந்து அரசாள்வது சிறந்தது என்று எண்ணியே, சாளுக்கியம் சென்றான். பல்லவனின் படைபலம் பாழ்பட்டது. செல்வம் குறைந்தது. மதிப்பு மங்கிற்று. தோல்வித் துயரத்தால், பல்லவம் துவண்டுவிட்டது. அதைத்தான் அந்தச் சாளுக்கியன் கவனப்படுத்தினான். பழைய புண்ணைக் கிளறினான்—கிளறியதோடு விடவில்லை—தோல்வியால் துவண்ட பல்லவம், மீண்டும் ஒளிபெற்றது, சைவத்தின் பலத்தினால் என்று கூறுவதன் மூலம், புண்ணிலே வேலும் பாய்ச்சினான். எங்ஙனம் தாங்குவர் இந்த வேதனையை.

சைவம் வெல்கிறது! சைவம் ஓங்குகிறது! வீழ்ந்தது வாதாபியல்ல, வைணவம் வீழ்ந்தது!—என்று பல்லவ நாட்டு வைணவர்கள் பதைபதைத்தனர்.

சாளுக்கியன் எதிர்பார்த்தது நடைபெறத் தொடங்கிற்று. வெற்றிக் களிப்பினூடே வேதனை. ஆனந்தப்பட வேண்டிய மக்களுக்குள்ளே, அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை! ஆம்! அவன் எண்ணத்தின்படி, பல்லவ நாட்டுக்குள் தீ மூண்டுவிட்டது—கலகத் தீ!

இது மூண்டுவிட்ட பிறகு, சாளுக்கியனின் மனதிலே நம்பிக்கை அதிகரித்தது. பரஞ்சோதியாரிடம் பணியாளாக இருப்பவன் என்ற முறையிலே, பலரைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததைப் பயன்படுத்திக் கொண்டு, சைவத்தின் மேன்மையை விளக்கும் போக்கின் மூலம் எவ்வளவு அருவருப்பைக் கிளப்ப முடியுமோ அந்த அளவு செய்து வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/26&oldid=1765272" இலிருந்து மீள்விக்கப்பட்டது