உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பிடி

வில்லாளன், விபரீதமான விளையாட்டிலே ஈடுபட்டான். சைவத்தின், மேன்மையை எடுத்துக்கூறுவது மட்டுமல்ல, மதமாற்ற வேலையையே, அதிலும், கட்டாய மதமாற்றக் காரியத்தையே துணிவுடன் செய்யலானான். அவன் தோற்ற சாளுக்கியன்தான்—அடிமை, சந்தேகமில்லை—ஆனால் அவன் ‘பெரிய இடத்திலே’ படைத் தலைவர் வீட்டிலே அல்லவா பணியாளாக இருக்கிறான். அக்ரமக் காரியந்தான் செய்கிறான்—கட்டாய மதமாற்றம்—ஆனால், அதற்காக அவனைக் கண்டித்தால், கண்டித்தால், அவன் பரஞ்ஜோதியாரிடம் முறையீட்டுக் கொள்வானே!

“என்ன துணிவு உங்கட்கு! எனது மனையிலுள்ள பணியாளைத் தண்டித்தீர்”—அது என்னையே கேவலப்படுத்தியதன்றோ! என்ன எண்ணினீர் என்னைப் பற்றி! என் ஆற்றல் தேவைப்பட்டது, புலிகேசியை வீழ்த்த, இன்று என்னை அவமானப்படுத்துகிறீர்-என்று பரஞ்ஜோதியார் சீறினால் என்ன செய்வது. “நீங்கள் கண்டிக்குமளவு என்ன குற்றம் புரிந்து விட்டான் வில்லாளன்! திருநீற்றின் பெருமையை எடுத்துக் கூறினதா, குற்றம்! திருநீறு, உமக்குப் பிடிக்கவில்லை. ஆனால் திருநீற்றுக்காரனின் தோள்வலியும், வாள்வலியும் தேவைப்பட்டது நாட்டைக் காக்க,” என்று வெகுண்டுரைத்தால், என்ன செய்வது என்று கலங்கினர்—மக்கள்—குறிப்பாக, வைணவர்கள். மன்னனிடம் முறையிடவேண்டிய அளவு விவகாரம் முற்றிவிட்டது. மன்னனோ, ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான்.

“அன்னிய நாட்டானின் துடுக்குத்தனம்.”

“பரஞ்ஜோதியார் இப் பயனற்றவனை ஏன் பணியாளாகக் கொண்டார்?”

“பரஞ்ஜோதியாருக்குத் தெரிந்திராது, இவனுடைய செயல்,”

“ஒரு சமயம், சாளுக்கியன் சைவத்தின் பெருமையை உணர்ந்தது பற்றி அவர் மகிழ்கிறாரோ என்னவோ!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/28&oldid=1765274" இலிருந்து மீள்விக்கப்பட்டது