உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பிடி

சைவத்தின் பெயரைக் கூறி, சாம்ராஜ்யாதிபதியை மிரட்டினான் வில்லாளன். வேந்தன், வெகுண்டானில்லை. “ஆவன செய்வோம், அறனடியாரே! ஆவின் பாலும், முக்கனியும் அரண்மனை விருந்து மண்டபத்திலே தயாராக உள—வாரும்” என்று அன்புடன் அழைத்தான்.

“நாம் வந்தது நாவின் ருசிக்காக அல்ல! நாதன் கட்டளையை நாடாளும் உமக்கு அறிவிக்கவே வந்தோம்—இனிச் செல்கிறோம்” என்று கூறிவிட்டு, சாது வேடத்திலிருந்த சாளுக்கியன் போய்விட்டான். அவன் போன பிறகு, நெடுநேரம் வரையில் மன்னன் சிரித்தான்.

“அரசனிடம் யாரோ ஒரு சாது வந்து, ஏதேதோ பேசினானாம்.”

“மிரட்டினானாம்.”

“சாபம் கொடுப்பேன் என்று கூறினானாம்.”

“மன்னன் மனம்மாறி, அவன் கட்டளையை நிறைவேற்ற இசைந்துள்ளாராம்.”

“சபை கூட்டுகிறாராமே!”

சாது—சாம்ராஜ்யாதிபதி சந்திப்பிற்குப் பிறகு, அரண்மனை முக்யஸ்தர்கள் இதுபோல் பேசிக் கொண்டனர். அவர்கள் கூறியபடி, அரச அவை கூடிற்று. மன்னன் நரசிம்மப் பல்லவன், வைணவர்கள் முறையீடு பற்றியோ, வம்பு பேசிய சாதுவைப் பற்றியோ பிரஸ்தாபிக்கவில்லை.

அவையில், அன்று விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மன்னனின் வருகைக்கு முன்பே, சபை கூடிவிடுவது முறை—அன்று சபைக்கு, மன்னனே முதலில் வந்து சேர்ந்தான். சபையில், பரஞ்சோதியாருக்கு வழக்கமாகத் தரப்படும் ஆசனத்தை எடுத்துவிட்டு, வேறோர் விலை உயர்ந்த ஆசனம் அவருக்காகப் போடச் செய்தான். வழக்கமான விசாரணைகளை அன்று நிறுத்திவிட்டான். பரஞ்ஜோதியார் சபை வந்ததும், தழுவிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/32&oldid=1766459" இலிருந்து மீள்விக்கப்பட்டது