சாம்பல்
35
“பரிசு அல்ல! தாங்கள் பணியாளரல்ல! படைத்தலைமையல்ல, தங்கள் தகுதிக்கும் தவத்துக்கும் ஏற்ற நிலை. பரஞ்ஜோதியாரே! பல்லவ சாம்ராஜ்யத்தின் கீர்த்தி மிக்க படைத்தலைவர் என்ற நிலையிலே, பாவியேன், ஒரு பரம பக்தரை, சைவ அன்பரைச் சிறைப்படுத்தி வைத்திருந்தேன். இறைவனின் அன்பனை, இரக்கமற்ற போர்த் தொழிலிலே புகுத்தினேன். இன்று அந்தத் தவறை உணர்ந்தேன். இனித் தாங்கள், எல்லையற்ற இன்பம் தருவதும், இகபரசுகத்துக்கு ஏதுவாவதும், தங்கள் இருதயத்துக்கு இன்பமூட்டுவதுமான சிவத்தொண்டு செய்து கொண்டு சுகமே வாழ்வீராக!”
“வேந்தே! இதென்ன வார்த்தை! இதன் பொருள் என்ன? இனி நான் அரச அவையில்...”
“அரச அவையில் என்றும் நீர் ஓர் மணிவிளக்கு. ஆனால்...என் படைத்தலைவன் என்ற சிறுதொழில் புரியச் சொல்லிப் பழி ஏற்க மாட்டேன்.”
“படைத் தலைவனாக இனி நான்...”
“அதனை நான் அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்! தாங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு! வேந்தர் சபையிலே வேலை தாங்கும் வேலையல்ல, விழி மூன்றுடையோனின் சேவை செய்து விளங்க வேண்டும் தாங்கள்.”
பரஞ்ஜோதி திகைப்படைந்தார்—பிரதானியர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை—வைணவர்கள், புன்சிரிப்பை அடக்கிப் பார்த்தனர், முடியவில்லை—மன்னன், அவையைக் கலைத்துவிட்டு, அரண்மனைக்குச் சென்றுவிட்டான்.
பரஞ்சோதியார் வாழ்க!
சைவம் ஓங்குக!
நரசிம்மப்பல்லவன் வாழ்க!
நாதனின் நற்தொண்டன் வாழ்க!