உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

71

இருவரின் பேச்சைக் குறுக்கே தடுக்கும் நிலையில் அங்கு பூபதியார் வந்தார். “ஆரிய சிரேஷ்டரே! இவர் பாஞ்சசன்ய பூபதியார், என் நண்பர்; என் மகள் வாசமல்லிகாவை, இவர் திருக்குமரன் ராமப்பிரசாதனுக்கு ‘பாணிக் கிரகணம்’ செய்ய ஏற்பாடாகி இருக்கிறது” என்று பண்டிதர் சொன்னார்; ஒரு கணம் முகம் கருத்தது பராசர ஸ்வாமிகளுக்கு-மறுகணம் ஓர் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “மெத்தச் சந்தோஷம்! வணிகரோ?” என்று கேட்டார். “ஆமாம்! மண்டலம் பலவற்றிலே தொடர்பு...நலந்தாவுக்குக்கூட, பண்டகசாலைக்குத் தேவையான பொருள்களை இவர் மூலம்தான் பெறுகிறார்கள்...” என்றார் பண்டிதர்.

“அதுதான் ஆர்ய தர்மம். நலந்தாவில் உள்ள நீசர்கள், நமது மதத்தை அழித்தொழிப்பவராக இருந்தாலும், அவர்கட்கு உதவி செய்வதுதான் ஆரிய தர்மம்...” என்றார் பராசர ஸ்வாமிகள்.

“உண்மைதான்! மேலும், நலந்தாவில் உள்ளவர்கள், நீசர்களுமல்ல. இது விஷயமாகவே பண்டிதருடன் பேச வந்தேன். என் மனம் நலந்தாவில் இலயித்துவிட்டது. ‘சொத்தில்’ பெரும் பகுதியை நலந்தாவுக்கே மானியமாக்கிவிட்டு குழந்தை வாசமல்லிகாவின் திருமணத்தையும் விரைவிலே முடித்துவிட்டு நலந்தாவுக்கே சென்று தங்கி ஊழியம் செய்து வாழ விரும்புகிறேன். குழந்தை என்னைப் பிரிய மனமின்றிச் சங்கடப்படுகிறது. என்றாலும், பெரியவர் இருக்கிறார் என்று தைரியம் கூறினேன்...” என்றார். பண்டிதரின் முகம் பயங்கரமாக மாறிவிடலாயிற்று. சிரமப்பட்டுச் சமாளித்துக் கொண்டார்.

“பூபதியாரே! சொத்து முழுவதையும் நீர் தானமாகக் கொடுத்துவிட்டு, வாசமல்லிகாவை வெறுங்கையோடு என் இல்லம் அனுப்பினாலும், நான் கவலை கொள்ளமாட்டேன். ஆனால், தாங்கள் நலந்தா சென்று தங்குவது என்றால். அது நாங்கள் பாஷாண்டி மதத்தில் வீழ்ந்துவிட்டது போலத் தோன்றும்—அந்தக் களங்கம், எனக்குள்ள புகழ், என் குடும்பத்தின் கீர்த்தி இவைகளைக் கெடுத்துவிடும்...” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/71&oldid=1769545" இலிருந்து மீள்விக்கப்பட்டது