70
ஒளியூரில்
நலந்தாவின் புகழோ ஆந்தையின் அலறலுக்கும், கோட்டானின் கதறலுக்கும் சட்டை செய்யாது, தண்ணொளி வீசிடும் வெண்ணிலவாகத் திகழ்ந்தது.
ரங்கராஜ பண்டிதரிடம், அவருடைய ‘பால்ய’ சினேகிதர் பராசரதாசர் வந்தார்—பார்த்து நீண்ட காலமாகிவிட்டிருந்தது மட்டுமல்ல—பராசரதாசர், பராசரஸ்வாமிகளாகிவிட்டிருந்தார்—ரிஷிக்கோலத்தில்! நாட்டின் நிலைமைகளை எல்லாம் எடுத்துப் பேசிக்கொண்டு வந்தனர், இருவரும். பராசரஸ்வாமிகள் சொன்னார். ‘பைத்யக்காரா! முன்புபோல நலந்தாவில் அந்த நாசகாரர்கள் மட்டுமே அங்கு கொட்டமடித்துக் கொண்டில்லை. ஆரிய மார்க்கத்தினரும் மெத்தச் சிரமப்பட்டு இடம் பெற்றாகி விட்டது. இப்போது, மாற்றானின் கோட்டைக்குள்ளேயே நமது படை இருக்கிறது. ரங்கராஜா! எந்த நேரத்தில் எந்த முறையில் இதைச் சாதிப்பது என்பதைக் கண்டறிவதே என் வேலை. நலந்தாவில் வேத வகுப்புகள் நடத்தும் பொறுப்பு எனக்கு. அடிக்கடி விவாதங்கள், சச்சரவு, அமளி—ஆமாம்—இப்பொது புத்தசாதுக்கள் பாடு திண்டாட்டம்தான்! கைகலப்பு என்று வந்துவிட்டால், நம்முடைய ஆசாமிகளுடைய திறமைதான் மேலோங்கி நிற்கிறது.’
“அதெப்படி ஸ்வாமிகளே?”
“அது எப்படியா? அசடன் கேட்க வேண்டிய கேள்வியை இராமாயணம், மகாபாரதம் அனைத்தும் அறிந்த நீ கேட்கிறாயே! அங்கு ஆரியமதம் பயிலும் மாணவர்களெல்லாம், உண்மையிலேயே மாணவர்கள்தானா? ஐம்பது ஆட்களை எதிர்த்தடிக்கும் வல்லமைசாலிகள் இருக்கிறார்கள்—கையில் ஓலைச்சுவடி இருக்கும் பகலில்; இரவு நேரங்களில் கட்டாரி! ஆமாம்; கூரிய கட்டாரி! ஆரிய போதனைக்குச் செவி சாய்க்க மறுக்கும் சண்டாளர்களின் மார்பிலே கட்டாரி பாயும்—பிறகு முதலைகள்!! ரங்கராஜா! நிர்மூலமாக்குவதற்கான சகல யுத்த சன்னத்தமும் செய்தாகிவிட்டது”.