ஒளியூரில்
69
மாடங்களும், சிற்ப வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்டு அழகுற விளங்கின. அல்லியும் பிறவும் பூத்து அழகினைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்த அலங்காரக் குளங்கள் அணியாக அமைந்திருந்தன. ஒவ்வோர் துறைக்கும் தனித் தனிக் கட்டிடம்—ஒன்பது அடுக்கு மாடி ஒன்று ஓங்கி நின்று கொண்டிருந்தது, வளரும் புத்தமார்க்கத்தின் எழிலை விளக்குவதுபோல. இவ்வளவு சிறப்புடன் விளங்கிய நலந்தாவின் வளர்ச்சிக்காக மகதநாட்டு மாமன்னன் மானியமாக 200 கிராமங்கள் தந்திருந்தான். வங்கநாட்டு வேந்தனும் அது போன்ற மானியம் வழங்கினான்.
நலந்தாவில் புனித ஏடுகளைக் குருட்டுப் பாடமாகக் கொண்டு, பாமரரை மிரட்டுவதற்காக அவைகளை உரத்த குரலிலே உச்சரிக்கும் புரோகிதர்கள் தயாரிக்கப்படவில்லை—ஆய்வுரையாளர்கள்—அறநெறி பரப்புவோர்—அன்பு போதனை புரிவோர் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர். ஜாதி பேதம் அறவே நீக்கப்பட்டது; பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்கேற்ற பக்குவம் உளதா என்று மட்டுமே பரிட்சை நடத்தினர்—குலம் என்ன, கோத்திரம் யாது? சிற்றரசனா, சீமான் மகனா? பேழையுடையானா, ஏழையா என்பதல்ல, அங்கு எடைபோட உதவிய படிக்கற்கள்! கற்றறிவாளனா, பற்றினை நீக்கிக் கொள்ளும் உளத்திண்மை உடையவனா, நற்பண்புகளின் கருப்பொருள் அவனிடம் உளதா-இவைகளைக் கண்டறிந்தே துவார பண்டிதர்கள், மாணவர்களைச் சேர்த்துக் கொண்டனர்.
இந்த மாபாவிகளின் கோட்டம், மண்மேடாகாதா! மகேசா! திரிபுரங்களையும் ஒரு நொடியில், ஒரு சிறுபொறியினால் சாம்பலாக்கிய சதாசிவமல்லவா, நீர்! திரிசூலி, நீ நினைத்தால் போதாதா இந்தத் தீயர்களைத் தீக்கிரையாக்க! மராமரம் துளைத்தவனே! ஜானகிராமா? அம்பொன்று எய்தால் போதுமே, இந்த அசுரக் கூட்டத்தினை அடியோடு அழித்திட! என்று திருவுள்ளம் இரங்குமோ? திருவருள் பாலிப்பது எந்நாளோ? என்று மனம் புழுங்கிய மறையவர் கூட்டம், மாரடித்து அழுதவண்ணமிருந்தது!