6
பித்தளை அல்ல,
கோர்ட்டிலே கொஞ்சம்கூட அச்சம் அடக்கம் காட்டாதவன் அப்பனைக் கண்டதும் இப்படி அழுகிறானே, சத்தியம் கூடச் செய்கிறானே, இனி திருடமாட்டேன் என்று. இது அல்லவா ஆச்சரியம் என்று போலீஸ்காரர்கள் எண்ணிக் கொண்டனர்.
திருட்டுக் குற்றத்துக்காகத் தன் மகன் தண்டிக்கப்படுவதைக் காணும் தகப்பன் தத்தளிக்காமலிருக்க முடியுமா? பாபம், இந்தப் பெரியவர் அதனால்தான் கதறுகிறார் இப்படி என்று பேசிக் கொண்டனர், அருகே நெருங்கி வந்திருந்தவர்கள்.
"அம்மா சொல்லும்னு சொன்னயேப்பா, கவனமிருக்குதா. எனக்குத் தங்கக் காப்பு செய்து போடணம்னு—இதோ பார்த்தாயா, மாட்டி விட்டாங்க, இரும்புக் காப்பு... இதைப் பாரப்பா, இதைப்பாரு! திருடினா இதுதான்... இது மட்டுந்தானா? ஊரே காரித்துப்பும்.. ஜெயிலுக்குப் போனவன் என்கிற கேவலம் உள்ளத்தில் நாளைக்கும் இருக்கும்."
'முத்து!' என்று கதறியபடி அந்த முதியவர் தன் மகன் எதிரே விழுந்து அழுதார்! அவருடைய கரங்கள் அவன் காலருகே சென்றன. போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி முதியவரை அப்புறப்படுத்திவிட்டு, அவனைப் போலீஸ் வேனில் ஏறச் செய்தனர். ஏறுவதற்கு முன்பு அவன் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு புளிய மரத்தடியில், ஒரு பெண் நின்று கொண்டு, முந்தானையால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்கக் கண்டான். புன்னகை செய்தபடி,அந்தப் பக்கம் பார்த்தான்.'முத்து! முத்து!' என்று முதியவர் கதறினார். போலீஸ் வண்டி கிளம்பி விட்டது.
"குடும்பத்துக்குக் கேவலத்தைத் தேடி வைக்கத்தானேடா, நீ பிறந்தே? உப்புப் போட்டுத்தானே சாப்பிடறே. உணர்ச்சி, மானாபிமானம் இருக்கவேண்டாமா..இந்தக்குடும்பத்தைக் காப்பாத்த நான் மாடா உழைக்கிறேன். உனக்கு ஆகுது வயது இருவது. ஒருவேலைக்கு இலாயக்கா.நீ உடம்பு வணங்கி ஒரு வேலை செய்தது உண்டா? உன் தங்கச்சி வய-