பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பிரதாப முதலியார் சரித்திரம்

குற்றம் சாட்டிப் பிடிக்கும்படிக்கும் ஜாக்கிரதை செய்தான். அந்தப் பிரகாரம் சேவகர்கள் வந்து, மங்களாகரம் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்; கற்பலங்காரி வெளியே போகாதபடி வீடைச் சுற்றிப் பாரா வைத்துவிட்டார்கள்.

"உத்தியோகம் போனபிற்பாடு, தரித்திர முதலிய சகல கஷ்டங்களையும் தைரியமாகச் சகித்த அந்தக் கற்பலங்காரி, தன் புருஷனைக் குற்றவாளியாக்கி, சேவகர்கள் பிடித்துக் கொண்டுபோனதைச் சகிக்க மாட்டாதவளாய் நெருப்பிலே போட்ட புஷ்பம் போல வாடிப் பதைத்து விம்மி அழுதாள். அந்தச் சமயத்தில் அந்தக் கொடுங்கோல் மன்னவனுடைய தாதிகள் வந்து, கற்பலங்காரியை நோக்கி "தானாய் வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவது" போல, நீயே உன்னுடைய வாழ்வைக் கெடுத்துக் கொள்கிறாய். உன் புருஷன் கொலை செய்ததாகச் சாட்சிகளால் குற்றம் ஸ்தாபிக்கிறபடியால், மரண தண்டனை கிடைக்குமென்பது நிச்சயம். ஆனால் நாங்கள் சொல்லுகிறபடி, நீ கேட்டால் உன் புருஷனுக்கு ஜீவ லயம் நேராது; நீயும் எப்போதும் சுமங்கலியாகவும், பாக்கியவதியாகவும் இருப்பாய்! எங்களுடைய வார்த்தையை நீ தள்ளி விட்டால் நீ அமங்கலி தான்" என்றார்கள். இந்த வார்த்தையைக் கேட்ட உடனே அந்தப் பதிவிரதையினுடைய சித்தம் சிறிதும் சலனப் படாமல் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள். "எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வந் தண்டிக்காமல் விடாது". மானம் பெரிதே அல்லாமல் ஜீவன் பெரிதல்ல; என்றைக்கிருந்தாலும் மனுஷ தேகம் எடுத்தவர்கள் சாவது நிச்சயமே யல்லாது சாகாத வரம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள் ஒருவரும் இல்லை. எப்படியும் ஒரு நாள் சாகப் போகிறவர்கள், சில நாள் முந்திச் செத்தால் பாதகம் என்ன? நான் என் புருஷனின் உயிரைக் காப்பாற்றுகிறதற்காகக் கற்பை இழந்து, பாவத்தையும்,