பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமியப்பன்‌ கொடுமை

57

பழியையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்கிறதைப் பார்ர்க்கிலும், பதிவிரதா பங்கமில்லாமல் நானும் என் புருஷனும் இறந்து, நித்திய மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை அடைவது உசிதம் அல்லவா?" என்றாள். "அப்படியானால் வருகிறதை நீ அநுபவித்துக் கொள்" என்று அந்தத் துஷ்டர்கள் சொல்லிப் போய்விட்டார்கள். இனிமேல் கடவுளைத் தவிர வேறு திக்கு திசை இல்லாதபடியால், அந்த உத்தமி கடவுளை நோக்கிப் பிரலாபித்துத் தன் குறைகளைச் சொல்லி முறையிடுவாள் ஆயினாள்.

அவளுடைய வீட்டைச் சுற்றிப் பாரா இருக்கிறவர்களில் ஒருவன், அவளுடைய புருஷனுக்கு மித்திரன் ஆனபடியால், குற்ற விசாரணை எப்படி நடக்கிறதென்று விசாரித்துத் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தாள். அதிரகஸியமாய் விசாரணை நடந்தபடியால், அவனுக்குக் கூட சில நாள் வரைக்கும் சங்கதி வெளியாகாமலிருந்து, பிறகு பிரகடனம் ஆயிற்று. மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் ஸ்தாபிக்கப்படுகிறதாகவும், ஆனால் மங்கம்மாளுடைய உத்தரவு இல்லாமல் மரண தண்டனை செய்ய அந்தச் சிற்றரசனுக்கு அதிகாரமில்லாதபடியால், மங்களாகரம் பிள்ளையை மரண தண்டனை செய்ய உடனே உத்தரவு அனுப்பவேண்டுமென்று இந்தக் கொடியன் மங்கம்மாளுக்கு ரகசியமாக எழுதிக்கொண்டிருப்பதாகவும், அந்தக் காவற்சேவகன் மூலமாகக் கற்பலங்காரி கேள்விப்பட்டு, அவளுக்கு உண்டான மனக்கிலேசம் எவ்வளவென்று யார் விவரிக்கக்கூடும்? அம்பு பட்டு விழுந்த மயில்போல அவள் கீழே விழுந்து புரண்டு "ஐயோ தெய்வமே! நான் என்ன செய்வேன்! இந்த அநியாயத்தை யாரிடத்திலே சொல்லுவேன்? பிரஜைகளால் துன்பத்தை அடைந்தவர்கள் அரசனிடத்தில் முறையிடுவார்கள். அரசனே அக்கிரமஞ் செய்தால் உம்மைத் தவிர வேறு யாரிடத்தில் சொல்லுவேன்? என் புருஷனை இரக்ஷித்தருளும்