பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பிரதாப முதலியார் சரித்திரம்

ஸ்வாமி" என்று முறையிட்டாள். பிறகு கடவுளது கிருபையால் அவளுக்குத் திடச் சித்தம் உண்டாகி, மங்கம்மாளிடத்திலிருந்து உத்தரவு வருகிதற்குமுன், அந்த அரசியிடத்திற்குத் தான் எப்படியாவது போய்த் தன் புருஷனைக் காப்பாற்றுகிறதற்கு மார்க்கந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தக் காவற்காரனுடைய சகாயத்தால் அவள் நடுச்சாமத்தில் வீட்டை விட்டு வெளிப்பட்டுத் திரிசிரபுரத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போக ஆரம்பித்தாள். ஓடும்போதே தபாற்காரன் எதிரே வருகிறானாவென்று பார்த்துக் கொண்டு ஓடினாள். தங்க விக்கிரகம் போல் அவளுடைய மேனி பிரகாசிக்க, அவளுடைய கூந்தல் அவிழ்ந்து சோர, ஜலப்பிரவாகமாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டு அவள் ஓடுவதைப் பார்த்தவர்கள் "இவள் தேவ ஸ்திரீயோ! அல்லது ராஜ ஸ்திரீயோ!" என்று மயங்கி அவள் துக்கத்துக்காக இரங்கி அழாதவர்கள் ஒருவருமில்லை. அவள் நடுவழியில் தபால்காரன் வருவதைக் கண்டு, அவனுக்கு நமஸ்காரஞ் செய்து "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று வினாவ, அவன் மகாராணியிடத்திலிருந்து மரண தண்டனை உத்தரவைக் கொண்டுபோவதாகத் தெரிவித்தான். அவள் உடனே தீர்க்க தண்டஞ் சமர்ப்பித்து, மரண தண்டனை உத்தரவை மாற்றுவதற்காகவே தான் மங்கம்மாளிடத்துக்குப் போவதாகவும், எப்படியும் அனுகூலம் கிடைக்குமென்றும், ஆகையால் அவன் புதுக்கோட்டைக்குப் போகாமல் தாமதிக்க வேண்டுமென்றும், மிகவும் பரிதாபமாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். இரக்க சுபாவமுள்ள அந்தத் தபாற்காரன், தேவ ஸ்திரீக்குச் சமானமாகிய இந்த ஸ்திரீயினுடைய பிரார்த்தனையை மறுக்கமாட்டாமல், ஒரு நாள் தாமதஞ் செய்வதாக ஒப்புக் கொண்டான். அந்தப்படி அவனிடத்தில் பிரமாணம் வாங்கிக்கொண்டு, வேடனுக்குப் பயந்து ஓடும் மான்போல, ஒரே ஓட்டமாக ஓடித் திரிசிரபுரத்தை அடைந்து மங்கம்மாளுடைய அரண்-